Published : 29 Oct 2020 04:01 PM
Last Updated : 29 Oct 2020 04:01 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 29) கூறும்போது, "புதுச்சேரியில் 4,001 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி -121, காரைக்கால் -8, ஏனாம் -19, மாஹே -33 என மொத்தம் 181 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி நெல்லித்தோப்பை சேர்ந்த 70 வயது முதியவர், மாஹேவை சேர்ந்த 59 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.70 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34 ஆயிரத்து 761 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,861 பேர், காரைக்காலில் 164 பேர், ஏனாமில் 53 பேர், மாஹேவில் 45 பேர் என 2,123 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், புதுச்சேரியில் 1,381 பேர், காரைக்காலில் 56 பேர், ஏனாமில் 71 பேர், மாஹேவில் 89 பேர் என 1,597 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,720 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 142 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3 லட்சத்து ஆயிரத்து 167 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 971 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
15 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுச்சேரியில் 20 சதவீதம் பேருக்கு மேல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை செயலாளர், இயக்குநர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினேன்.
அப்போது, தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளை பயன்படுத்திக் கொள்கிறோம். தற்சமயம், தனியார் மருத்துவக் கல்லூரிகளை பயன்படுத்த மாட்டோம். எனவே, கரோனா தொற்று இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளியுங்கள் என கூறினேன்.
கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தினமும் சுகாதாரத்துறை குழுவினர் வீடு, வீடாக சென்று பார்த்துவிட்டு ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சுகாதார குழுவின் ஆய்வு முடிந்துவிட்டது. புதுச்சேரியில் நவ.3-ம் தேதிக்குள் ஆய்வை முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு 'நெகட்டிவ்' என்று வந்தபிறகு அத்துடன் சுகாதாரத்துறையின் பணி முடிந்துவிட்டது என்று நினைக்க மாட்டோம். அந்த நபருக்கு முழு சிகிச்சையும் முடிந்து எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது வரை சுகாதாரத்துறையின் கடமையாகும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT