Published : 29 Oct 2020 03:10 PM
Last Updated : 29 Oct 2020 03:10 PM

கரோனா காலத்தில் எழுதிக் குவித்த பெண் எழுத்தாளர்; ஒரே மேடையில் 100 புத்தகங்களை வெளியிட ஏற்பாடு: முதல்வர் விருதுக்கும் தேர்வு

மரியதெரசா.

கரோனா உருவாக்கிய நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் 50 புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார் பெண் எழுத்தாளர் மரியதெரசா. நடப்பு ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கும் அவர் தேர்வாகியுள்ள நிலையில், வரும் 3-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விருதினைப் பெறுகிறார்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் மரியதெரசா. வயதால் 65-ஐத் தொட்டிருக்கும் இவர், வயது என்பது வெறும் எண்ணிக்கைதான் என்பதுபோல் எழுதிக் குவிக்கிறார். இந்தக் கரோனா காலத்தில் மட்டும் முழுதாக 50 நூல்களை எழுதி அச்சுக்கு அனுப்பியிருக்கிறார். அதற்கு முன்பு எழுதி முடித்த 50 நூல்களையும் இந்தக் கரோனா காலத்தில் பதிப்பித்து வாங்கியிருக்கிறார். இந்த நூறு நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட ஆயத்தமாகி வரும் இவர், அதற்கு முன்பே நூறு நூல்களை எழுதி வெளியிட்டவர். இப்படி மரியதெரசா 200 நூல்களை, தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்திருக்கிறார். சிறுகதை, கவிதை என நீள்கிறது இவரது படைப்புலகப் பட்டியல்.

இதுகுறித்து முனைவர் மரியதெரசா 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''ஆசிரியையாகப் பணியைத் தொடங்கி, கடைசியாக கல்லூரியில் பேராசிரியையாகப் பணி ஓய்வு பெற்றேன். தமிழில் முனைவர் பட்டமும், இந்தியில் எம்.ஏ.வும், ஆங்கிலத்தில் எம்.ஏ.வும் படித்துள்ளேன். எங்கள் பூர்வீகம் காரைக்கால். என்னுடைய சிறுவயதில் எனது தாத்தா அமலோர் தம்பியைப் பற்றிப் பலரும் பெருமையாகச் சொல்வார்கள்.

பிரெஞ்சு மொழியில் தாத்தா மிக அழகாகக் கவிதை எழுதுவாராம். என் அம்மாவும் ‘காரை மகள்’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். என் தம்பியும்கூட ‘காரை மைந்தன்’ என்னும் பெயரில் கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இப்படி எங்கள் வீட்டில் கவிதைகள் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்கிறது. அந்த வகையில் எனக்கும் இயல்பாகவே கவிதை எழுதும் ஆற்றல் வாய்த்தது.

பொதுவாக ஹைக்கூ எழுதுகிறோம் என்னும் பெயரில் ஒரே பொதுமைக்குள் அதை அடக்கிவிடுவார்கள். ஆனால், அதிலேயே முரண் கூ, போதனைக் கூ, எதுகைக் கூ, குறில் கூ, நெடில் கூ எனப் பல உள்கூறுகள் உள்ளன. இவை அத்தனையிலும் கவிதைகள் எழுதிப் புத்தகம் வெளியிட்டுள்ளேன். தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலம் இதுவரை 130க்கும் அதிகமான விருதுகள் பெற்றிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மைல்கல்லாக தமிழக அரசு சார்பில் வரும் 3-ம் தேதி சென்னையில் வைத்து, என் தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழ்ச் செம்மல் விருது வழங்குகிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்திற்காக என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள். எனது நூல்கள் கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் உள்ளன. மலேசியா, பாங்காங் உள்பட பல நாடுகளில் நடைபெற்ற பன்னாட்டு, இந்திய அளவில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுப் பேசி இருக்கிறேன்.

எனக்கு இரண்டாயிரத்து சொச்சம்தான் பென்ஷன் வருகிறது. அதை வைத்து எதுவும் செய்யமுடியாது. பணிக்காலத்தில் சேமித்த பணத்தை வங்கியில் வைப்புத் தொகையாகப் போட்டிருக்கிறேன். அதில் ஓரளவு வட்டித் தொகை வரும். அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, வங்கிகளின் வட்டி மட்டும் அதே நிலையில் நிற்கிறது.

இந்த வயதிலும் எனக்கென்று எந்த வசதியும் செய்து கொள்ளாமல், வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்தைச் சேமித்துதான் புத்தகங்களைப் பதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், என் தேவைகளைச் சுருக்கிக்கொண்டு என் எழுத்துகளுக்கு நூல் வடிவம் கொடுக்கிறேன்.

புத்தகங்களை விற்றுப் படைப்பாளி நல்ல நிலைக்கு போகும் சூழல் தமிழ் இலக்கிய உலகில் இல்லை. அதேநேரம் இது நான் வாழ்ந்ததற்கான பதிவு. புத்தகங்கள் எதிர்காலத்தின் கண்ணாடி. அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பு இது'' என்கிறார் மரியதெரசா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x