Published : 29 Oct 2020 01:22 PM
Last Updated : 29 Oct 2020 01:22 PM
தனது அரசியலை நிலைப்பாடு குறித்து ட்விட்டர் பக்கத்தில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி.
கடந்த சில தினங்களாக அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு உண்டானது. அனைத்து ஊடகங்களும் ரஜினி வீட்டின் வாசலில் கூடினார்கள்.
இதனிடையே, சமூக வலைதளத்தில் ரஜினி வெளியிட இருந்த அறிக்கை இதுதான் எனச் சில தகவல்கள் வெளியாகின. அதில் தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை பெரும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்".
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, 'அண்ணாத்த' படப்பிடிப்பிலும் ரஜினி கலந்து கொள்ளவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT