Published : 29 Oct 2020 12:48 PM
Last Updated : 29 Oct 2020 12:48 PM

அரசை எளிதில் தொடர்புகொள்ள உதவும் 'நமது அரசு' வலைதளம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

நமது அரசு இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை

மக்கள், அரசை எளிதில் தொடர்புகொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'நமது அரசு' எனும் வலைதளத்தை, தலைமைச் செயலகத்தில் நேற்று (அக். 28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தகவல் தொழில்நுட்பவியில் துறையின் 2017-18 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் வலைதளம் வாயிலாக கருத்துக் கணிப்புகள், ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று அதன் மூலம் தமது கருத்துகளைச் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் வலைப்பதிவுகள் மூலமாக அரசுக்குத் தெரிவிக்க உதவும் வகையில் 'நமது அரசு' (http://tamilnadu.mygov.in) என்ற பொதுமக்களுக்கான தமிழ்நாடு அரசின் வலைதளம் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழ்நாடு அரசின் 'நமது அரசு' வலைதளம் 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளமானது, அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்குமிடையே உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் சார்ந்த நேர்வுகளில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் தளமாக இருந்து உதவும்.

மேலும், கலந்துரையாடல், செயல்பாடுகள், தகவல்களைப் பரப்புதல், படைப்புத்தளம், கருத்துக்களம், கருத்துக் கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாக்கெடுப்புகளின் அடிப்படையில் அரசுச் சேவைகளைச் செம்மையாகச் செயல்படுத்த இது உதவும்.

'நமது அரசு” வலைதளம், பொதுமக்களுக்கும், அரசுக்குமிடையில் ஒரு புதிய நல்லுறவை ஏற்படுத்துவதோடு, அரசு இயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொள்ளவும் உதவும். மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக் கணிப்புகளைப் பெற்று, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x