Published : 29 Oct 2020 12:02 PM
Last Updated : 29 Oct 2020 12:02 PM
உழைப்பால் ஈட்டிய செல்வத்தைச் சேமிப்பது அவசியம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (அக். 29) வெளியிட்ட அறிக்கை:
"மக்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.
'சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்' என்ற முதுமொழிக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தைத் தன் குடும்பத்திற்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாகத் திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.
'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை, அஞ்சலகச் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறுகச் சிறுக சேமிக்கப்படும் அத்தொகை பன்மடங்காகப் பெருகி, எதிர்கால வாழ்க்கைக்குப் பாதுகாப்பை அளிக்கும்.
இந்த உலக சிக்கன நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற, அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT