Published : 29 Oct 2020 11:55 AM
Last Updated : 29 Oct 2020 11:55 AM
சென்னையில் வரலாறு காணாத கனமழை நேற்றிரவு பெய்தது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே இரவில் 18 செ.மீ., திருவள்ளூரில் 13 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் சாலையில் வெள்ளம்போல் மழை நீர் தேங்கியது.
அக்டோபர் 28 (நேற்று) தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
ஆனால், நேற்று பகலில் லேசாக மழை பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.
இது படிப்படியாக சென்னை மற்றும் புறநகரில் கனமழையாக மாறி பெய்யத் தொடங்கியது. விடிய விடிய கனமழை விடாமல் பெய்ததால் சென்னை முழுவதும் சாலையில், தெருக்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. தேனாம்பேட்டை நக்கீரன் நகரில் உள்ள குடியிருப்பில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழையால் திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. சென்னை திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 அடிவரை தேங்கியது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமல் தவித்து நின்றனர்.
சென்னையில் முதல்வர், அமைச்சர்கள் செல்லும் முக்கியச் சாலைகளான கடற்கரை காமராஜர் சாலை, ஆர்.கே.சாலையிலும் மழை நீர் தேங்கி சாலை முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். பெரிய வாகனங்கள் தவிர சிறிய வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிப் பழுதடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி வாகனங்களைத் தள்ளிச் சென்றனர்.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன. சென்னையில் மழை நீர் வடிகால்கள் சிறப்பாகச் சுத்தம் செய்யப்பட்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ளும் வண்ணம் உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறிவந்த நிலையில், சாலையில் தேங்கிய மழைநீர் வடிகால் வழியாகச் செல்ல முடியாததால் சாலைகளில் வெள்ளம்போல் தேங்கியது.
சென்னை ராயப்பேட்டையில் ஜெகதாம்பாள் காலனியில் பெரிய மரமொன்று முறிந்து சாலையில் நின்றிருந்த கார் மீது விழுந்தது. சேத்துப்பட்டில் மரம் விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற தாய், மகள் காயமடைந்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டிப் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று சென்னையில் சுரங்கப்பாலங்களில் தேங்கிய மழை நீரும் அகற்றப்பட்டது.
சென்னை முழுவதும் பெய்த மழையால் தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நள்ளிரவுமுதல் அதிகாலை வரை 18 செ.மீ. மழையும், திருவள்ளூரில் 13 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT