Published : 28 Oct 2020 08:22 PM
Last Updated : 28 Oct 2020 08:22 PM
விழுப்புரம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஒருவர், கடந்த 23.4.2011 ஆம் ஆண்டு வயலுக்குச் சென்றநிலையில் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியபோது, மறுநாள் காலை அங்குள்ள ஓடையில் நிர்வாணமாக, நகைகள் பறிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரினார். இதையடுத்து, நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், விழுப்புரம் அருகே துலுக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுப் பெண் ஒருவர், 26.6.2012 ஆம் தேதி வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் தேடியபோது அங்குள்ள விவசாயக் கிணற்றில் நகைகள் பறிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் அறுக்கப்பட்டு, நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, உளுந்தூர்பேட்டை அருகே ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்கிற அம்பிகாபதி, நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, "தனியே வயல்வெளியில் இருக்கும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறிப்பது வழக்கம். அப்படி இரு பெண்களைக் கொலை செய்தோம். இதில் மேலும் 4 பேருக்குத் தொடர்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மதியழகனை (29) போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (33), குரு பாலன் (37) ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, "39 வயதுப் பெண்ணைக் கொலை செய்தது நாங்கள் 4 பேர்தான். ஆனால், மற்றொரு பெண்ணைக் கொலை செய்தபோது எங்களோடு ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குத் தொடர்பு உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். அவரைப் போலீஸார் தேடிவந்த நிலையில் பாலமுருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இவ்வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று (அக். 28) இவ்வழக்கில் நீதிபதி சாந்தி, 37 வயதுப் பெண்ணின் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும், மற்றொரு பெண்ணின் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையும், இரண்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேருக்கு ரூ.36 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலமுருகனுக்கு ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT