Published : 28 Oct 2020 08:12 PM
Last Updated : 28 Oct 2020 08:12 PM
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு, பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகம் என்ற நபரை நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 28) வெளியிட்ட அறிக்கை:
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பாஜக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பாஜக எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!
அப்படியிருக்கும் போது, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த, அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக, அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!
பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பாஜக கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக அமைந்துவிட்டது.
பெண்ணினத்திடம் பாஜகவுக்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பாஜக 'பிராண்ட்' கலாச்சாரமா?
பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவுக்கு, எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தராக இருக்கும் மருத்துவர் சுதா சேஷய்யனையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பாஜக அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.
பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட சுதா சேஷய்யன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும் கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து, ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கிவிட்டு, தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக் குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முன்னெடுக்காத மத்திய பாஜக அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது, தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT