Published : 28 Oct 2020 06:17 PM
Last Updated : 28 Oct 2020 06:17 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வேளாண் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை குறைத்து வழங்கியதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் திடீரென ஊராட்சித் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அருகே பெரியகொட்டகுடி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த 98 விவசாயிகள் தங்களது 260 ஏக்கர் நெல் பயிரை மத்திராவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2018-19-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்தனர்.
பெரியகொட்டகுடி வருவாய் கிராமத்திற்கு 67.82 சதவீதம் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
இதனால் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் இழப்பீடாக கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் தவறால் மத்திராவயல் வருவாய் கிராமத்திற்குரிய 21.35 சதவீதம் இழப்பீடே பெரியகொட்டகுடி வருவாய் கிராமத்திற்கும் கிடைத்துள்ளது.
இதனால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை விவசாயிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று புதுவயல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கூடுதல் இழப்பீடு தர வழியில்லை என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விரக்தியடைந்த விவசாயியும், பெரியகொட்டகுடி ஊராட்சித்தலைவருமான தனபால் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள் சமரசத்தை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஊராட்சித் தலைவர் தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT