Published : 28 Oct 2020 06:04 PM
Last Updated : 28 Oct 2020 06:04 PM
பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், பெரிய கடை வீதி மற்றும் என்எஸ்பி சாலை ஆகியவற்றில் ஆட்டோக்கள் தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைவு பெற்ற ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தினர் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இன்று (அக். 28) நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து எண்ணெய் எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோவுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்து உத்தரவிட வேண்டும். வாகனத்துக்கான தகுதிச் சான்றிதழ் (FC), எதிரொளிப்பு ஸ்டிக்கர் ஆகியவற்றை அரசே வழங்க வேண்டும். அதுவரை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனத் தகுதிச் சான்றிதழ் (FC) பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும்.
வாடகை வாகனங்களைப் பெரு நிறுவனங்கள் இயக்குவதைத் தடை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ சங்கங்களுடன் விவாதித்து மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.
தற்போது இயக்கத்தில் உள்ள ஆட்டோக்களுக்கே போதிய சவாரி கிடைக்காமல் வருமானம் இன்றி ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், பெரிய கடை வீதி மற்றும் என்எஸ்பி சாலை ஆகியவற்றில் ஆட்டோக்கள் தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும்.
நகருக்குள் மட்டும் இயக்க அனுமதி பெற்று, இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ஜீவா, சுமைப் பணி தொழிலாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராஜா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் பாடல் பாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT