Published : 28 Oct 2020 05:51 PM
Last Updated : 28 Oct 2020 05:51 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 102 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 28) கூறியதாவது:
"புதுச்சேரியில் 3,792 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-75, காரைக்கால்-8, ஏனாம்-8, மாஹே-11 என மொத்தம் 102 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 590 ஆக உயர்ந்தள்ளது. இறப்பு விகிதம் 1.71 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34 ஆயிரத்து 583 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,882 பேர், காரைக்காலில் 167 பேர், ஏனாமில் 42 பேர், மாஹேவில் 55 பேர் என 2,146 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியில் 1,336 பேர், காரைக்காலில் 54 பேர், ஏனாமில் 68 பேர், மாஹேவில் 82 பேர் என 1,540 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,686 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 103 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 13 பேர், மாஹேவில் 17 பேர் என 154 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 307 (87.64 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 97 ஆயிரத்து 195 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 928 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 'நெகட்டிவ்' வந்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது குறித்து சுகாதாரக்குழு ஆய்வு செய்துள்ளது. இது இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் முதன்முறையாகச் செய்துள்ளோம். குறிப்பாக, 5 சதவீதம் பேர் கரோனா பாதித்து 'நெகட்டிவ்' வந்து 5 மாதங்களான பிறகும் கூட பிற நோய்த்தொற்றின் காரணமாக முழுமையாகக் குணமடையாமல் உள்ளனர்.
அவர்களை மருத்துவக் குழுவினர் மீண்டும் சென்று பார்வையிட்டு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை 3 அல்லது 4 நாட்களுக்குப் பிறகு நேரடியாக மருத்துவர்கள் சென்று பார்த்து அவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை அறிந்து அவற்றைச் செய்யவும் முடிவெடுத்துள்ளோம்.
கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட தலா ஒரு நபருக்கு மீண்டும் கரோனா வந்துள்ளது. புதுச்சேரி சுற்றுலாத் தளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணிவது இல்லை. மேலும், அடுத்த மாதம் 14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை வருகிறது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு பண்டிகை தினங்கள் வருகின்றன. அவற்றை முன்பு கொண்டாடியது போல் தற்போது கொண்டாட நினைத்தால் கரோனா அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட கரோனா தொற்று மீண்டும் பரவாமல் இருக்க, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT