Last Updated : 28 Oct, 2020 04:50 PM

 

Published : 28 Oct 2020 04:50 PM
Last Updated : 28 Oct 2020 04:50 PM

குமரி மருத்துவர் தற்கொலை சம்பவத்தில் டிஎஸ்பி.,யிடம் தனிக்குழுவினர் விசாரணை: தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. தகவல்

மருத்துவர் சிவராம பெருமாள் (இடது), டிஎஸ்பி பாஸ்கரன் (வலது)

நாகர்கோவில்

கன்னியாகுமரி மருத்துவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் தனிக்குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணை அறிக்கையில் தவறு இருப்பதாக நிரூபணம் ஆனால் டி.எஸ்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள பறக்கை இலந்தவிளையைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள்(45). மருத்துவரான இவர் பறக்கையில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார். இவர் திமுக மருத்துவரணியின் குமரி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு துர்கா, லீலா என இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த 26-ம் தேதி சிவராம பெருமாள் தனது மருத்துவமனையில் உள்ள ஓய்வு அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்தின்போது எழுதி வைத்திருந்த கடிதத்தில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், மற்றும் தனது உறவினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, இவர்களின் மிரட்டலாலும், தனது மனைவியை அவதூறாக பேசியதாலும் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

மேலும் விஷம் அருந்தும்போது தனது நண்பர் ஒருவருடன் செல்பேசியில் உருக்கமாக பேசும் உரையாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மகள் துர்காவிடம் அவர் தற்கொலை செய்யும் முடிவை கூறியதுடன், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி இதுபோன்று மிரட்டும் அதிகாரிகளை கேள்விகேட்டு தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்.

கடிதம், மற்றும் செல்பேசி உரையாடலுக்குப் பின்பு மருத்துவர் சிவராம பெருமாள் தற்கொலை செய்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிவராம பெருமாளின் தற்கொலைக்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிவராம பெருமாளின் உடலை வாங்குவதாக அவரது பெற்றோர், மற்றும் உறவினர் தெரிவித்தனர்.

அப்போது திமுக எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் கோரிக்கை விடுத்தனர். சிவராம பெருமாள் மரணத்திற்கு முன்பு குறிப்பிட்டது போன்று டி.எஸ்.பி. பாஸ்கரன் மீது தவறு இருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து சிவராம பெருமாளின் உடலை உறவினர்கள் பெற்றுகொண்டனர்.

இந்நிலையில் சிவராம பெருமாளின் தற்கொலை சம்பவத்தின் உண்மை நிலைய அறிய ஏ.டி.எஸ்.பி. மணிமாறன் தலைமையில் குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் சாஸ்திரி உட்பட போலீஸார் அடங்கிய தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் முதற்கட்டமாக மருத்துவரின் மனைவி, பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கடிதத்தை ஆய்வு செய்ததில் சிவராமபெருமாள் தற்கொலைக்கு முன்பு அவர் கைப்பட எழுதியது தான் என்பதை உறுதி செய்தனர்.

இதனால் இன்று கடிதத்திலும், செல்பேசி உரையாடலில் அவர் குறிப்பிட்டவாறு டி.எஸ்.பி.யின் மிரட்டல் தான் தற்கொலைக்கு காரணமா? எனவும் டி.எஸ்.பி. பாஸ்கரனை அழைத்து தனி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணை அறிக்கை இன்னும் சில தினங்களில் எஸ்.பி.யிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதில் சிவராம பெருமாளின் தற்கொலைக்கு டி.எஸ்.பி.யின் மிரட்டல் காரணம் என நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x