Last Updated : 28 Oct, 2020 04:25 PM

 

Published : 28 Oct 2020 04:25 PM
Last Updated : 28 Oct 2020 04:25 PM

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்; முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் திவ்யதர்ஷினி, டிஆர்ஓ ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று நாட்டினார்.

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக கடந்த ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்கள் கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்டன. புதிதாகத் தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தற்காலிகக் கட்டிடங்களில் இயங்கி வருகிறது.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகம் மாவட்ட வனத்துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் கட்ட, ஆயத்தப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியர் அலுவலகம் ராணிப்பேட்டை, பாரதி நகரில் ஒருங்கிணைந்த வளாகமாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.118.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 28) காலை நடைபெற்றது.

தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் புதிய ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மாதிரி வடிவம்

புதிதாகக் கட்டப்படவுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு அலுவலர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட கட்டிடங்கள் ரூ.118.40 கோடி மதிப்பில் 5 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த வளாகமாகக் கட்டப்பட உள்ளன.

இதையொட்டி, ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், எம்.பி. முகமதுஜான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்), ஜி.சம்பத் (சோளிங்கர்), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x