Published : 28 Oct 2020 04:19 PM
Last Updated : 28 Oct 2020 04:19 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம்.கடோச் நியமனம்:14 உறுப்பினர்களையும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

மதுரை 

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனையின் தலைவராக தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் 14 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் எந்த இடத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பது என்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உருவானதால் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டது.

கடைசியாக மத்திய சுகாதாரத்துறை குழு பரிந்துரைப்படி 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வானது.

ரூ.1,264 கோடியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதிகளுடன் அமையும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.

ஆனால், தற்போது வரை இந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மருத்துவமனை கட்டுவதற்கு நிதி வழங்குவதாக உறுதியளித்த ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் (JICA- Japan International Cooperation Agency) தற்போது வரை கடன் வழங்கவில்லை.

அதனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் மட்டுமே தோப்பூரில் நடந்துள்ளது.

அதேநேரத்தில் மதுரையுடன் அறிவித்த நாட்டின் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கி அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி நடக்கிறது.

இந்நிலையில் மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் என்பவரை நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர், தற்போது ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார்.

இவருடன் 14 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்து, அந்த உத்தரவை அரசிதழில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் குழுவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயய்யன், மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர், இயக்குனர், கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் காமேஷ்வரர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பங்கஜ் ராகவ், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் வனஜாக்‌ஷம்மா, ஆக்ரா சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் பிரசாந்த் லாவண்யா, சென்னை கே.எம்.சி.மருத்துவ கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்பட 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தலைவர், உறுப்பிரன்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனியாவது மதுரை எய்ம்ஸ் மருத்துமவமனைக்கான நிதி ஒதுக்கீடு பெறுவது, கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்தும் பணிகள் விரைவாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை எம்பி சு.வெங்கடேஷன் எதிர்ப்பு:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழு நியமிக்கப்பட்ட விவரம் வெளியானவுடன் மதுரை மாக்சிஸ்ட் கம்யூனிஸ் எம்பி சு.வெங்கடேசன், தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘‘தோப்பூரில் அமைய உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ஏபிவிபி(ABVP) அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சண்முகம் சுப்பையா நியமித்திருப்பது அவர் செய்த இழி செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது எங்களது கால் நூற்றாண்டு கனவு மற்றும் போராட்டம். அதனை நிறைவேற்றும் பொறுப்பை தளராத வேகத்தோடு பணியாற்றி கொண்டு வந்து சேர்ப்போம்.

மக்களவையின் உள்ளேயும், வெளியும் எங்கள் பணி வீரியத்தோட தொடரும் ’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சண்முகம் சுப்பையா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர். சென்னை, மதுரையிலேயே எத்தனையோ மருத்துவத்துறை பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இவரை நியமிக்க காரணம் என்ன?.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, தமிழகத்தின் பெருமையாகக் கருதப்படுகிறது. அந்த பெருமைமிகு மருத்துவமனைக்கு தகுதியானவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு, அரசியல் ரீதியாக உறுப்பினர்களை நியமித்துள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x