Last Updated : 28 Oct, 2020 02:30 PM

 

Published : 28 Oct 2020 02:30 PM
Last Updated : 28 Oct 2020 02:30 PM

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு; சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவ மேற்படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு இடம் வழங்க உத்தரவிடக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை இன்று (அக். 28) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

"தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் காலியாக இருந்த 74 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் தனியார் கல்லூரிகளுக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காலியிடங்களை நிரப்புவதற்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதைத் தொடர அனுமதித்தால், அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி இழைப்பதற்குச் சமம் ஆகும்.

தகுதி இல்லாமல் பணம் கொடுத்து மருத்துவ மேற்படிப்பு இடங்களை விலைக்கு வாங்கும் மாணவர்களால் இந்தச் சமுதாயத்திற்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் இடம் பெறுவதற்குப் பணம், மேலிடத் தொடர்பு, அதிகாரம் ஆகியன முக்கியக் காரணிகளாக இருக்கக்கூடாது. தகுதி மட்டுமே காரணியாக இருக்க வேண்டும்.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும் புள்ளிவிவரங்களையும் பார்க்கும்போது மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையேயான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்?, கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்ற விவரங்கள் உரிய விசாரணைக்குப் பிறகே வெளியே வரும்.

எனவே, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக டிஜிபி உத்தரவிட வேண்டும்.

இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி 1-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது".

இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x