Published : 28 Oct 2020 01:21 PM
Last Updated : 28 Oct 2020 01:21 PM
தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள சோழர் கால ஓவியங்கள் 1930-ம் ஆண்டு வரை உலகத்தின் பார்வைக்கு தெரியாமல் இருந்தன.
1930-ம் ஆண்டு இக்கோயிலுக்கு வந்த அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் கருவறை திருச்சுற்றுப்பாதை சுவர்களில் இருந்த நாயக்கர் கால ஓவியங்களை பார்வையிட்டபோது, ஓவியங்களுக்குக் கீழ் நாயக்கர் கால ஓவியங்களுக்கும் முற்பட்ட ஓவியங்களின் வண்ணங்கள் இருப்பதைப் பார்த்தார்.
பின்னர், மீண்டும் 1931-ம் ஆண்டு ஏப்.29-ம் தேதி மீண்டும் கோயிலுக்குச் சென்ற இவர், மேற்கு சுவர் பகுதியை விரிவாக ஆய்வு செய்து நாயக்கர் கால ஓவியங்களுக்கு கீழே சோழர் கால ஓவியங்கள் பல மறைந்துள்ளதைப் பார்த்து வியப்படைந்து, பின்னர் இதனை உலகுக்கு தெரியப்படுத்தினார்.
பெரிய கோயிலின் கருவறை சுற்றுப் பாதையின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சோழர் கால ஓவியங்களைக் காண, கருவறையின் முன் உள்ள இடைவெளி பகுதி வழியாக செல்ல முடியும். மூலவர் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இப்பகுதியை நீண்ட பெரிய கதவுகளை கொண்டு அடைத்து விட்டனர்.
எனவே, ஓவியங்களைப் பார்ப்பதற்கு பெரிய கோயிலின் தென் பகுதியில் தட்சிணாமூர்த்தி மாடத்துக்கு அருகில் வாயில் போன்று அமைந்துள்ள நீண்ட பலகணி வழியை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வழியையும் அடைத்து விட்டனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலரும், ‘ராஜராஜம்’ நூலின் ஆசிரியருமான வெ.ஜீவக்குமார், “ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசர்கள், அரச குடும்பத்தினர், புலவர்கள், பொதுமக்கள், நடை, உடை, அணிகலன்கள், வழிபாடு, வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் சோழர் கால ஓவியங்கள் பல அழிந்த நிலையில், தற்போது காணப்படும் இந்த ஓவியங்களை இளைய தலைமுறையினர் நேரில் பார்த்து தெரிந்துகொள்ள தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும்” என இந்திய தொல்லியல் துறைக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பியிருந்தார்.
புகைப்பட காட்சி
இதைத்தொடர்ந்து, இந்திய தொல்லியல் துறையின் உதவி பராமரிப்பு அலுவலர் கடந்த அக்.21-ம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், “இந்த ஓவியங்கள் பாதுகாக்கப்பட்ட ஓவியங்களாக இருப்பதால், பாதுகாப்பு கருதி அவற்றை நேரில் பார்வையிட அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த ஓவியங்களின் புகைப்படங்களை கோயிலின் தென்புறத்தில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT