Published : 28 Oct 2020 01:08 PM
Last Updated : 28 Oct 2020 01:08 PM
கோவை மாநகராட்சியுடன் கடந்த 2011-ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு ஊராட்சி என மொத்தம் 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. மாநகரில் இருந்த 72 வார்டுகள் 60 வார்டுகளாகவும், இணைக்கப்பட்ட பகுதிகள் 40 வார்டுகளாகவும் ஒருங்கிணைக்கப்பட்டு, மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட 60 வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2009-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப் பணி தொடங்கப்பட்டது. முதல் இரு கட்ட திட்டப் பணிகள் முடிவடைந்து, தற்போது ரூ.143.65 கோடி மதிப்பில் 297.46 கிலோ மீட்டர் தூரத்துக்கு மூன்றாவது கட்ட திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்ட இப்பணி, 10 ஆண்டுகளை கடந்து நடைபெற்றுவருகிறது.
அதேபோல, மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 40 வார்டுகளிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பாதாள சாக்கடை திட்டப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பணி தொடங்கப்பட்டது. இப்பணியும் முடியவில்லை.
இது தொடர்பாக வெள்ளலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் கூறும்போது, ‘‘87 முதல் 100-வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜி.டி டேங்க், வெள்ளலூர் பிரதான சாலை, கோவைப்புதூர், கோணவாய்க்கால் பாளையம், அன்பு நகர், சாமண்ண நகர், கல்லறைச்சேரி, மேட்டூர் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சாரதா மில் சாலையில் பணி முடிந்து போடப்பட்ட சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது. கூடுதல் பணியாட்களை வைத்து பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை செயற் பொறியாளர் அண்ணாதுரை கூறும்போது, ‘‘குறிச்சி, குனியமுத்தூர் பகுதியில் ரூ.442 கோடி மதிப்பில், 435 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதாள சாக்கடை திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழாய் பதிக்கும் பணி, கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி ஆகியவை இதில் அடங்கும். தற்போது 53 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன.
175 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தின் ஒரு பகுதியில் ரூ.50 கோடி மதிப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடக்கிறது. 2021 டிசம்பர் மாதத்துக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 410 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 110 தொழிலாளர்களை களத்தில் இறக்க, ஒப்பந்த நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT