Published : 27 Oct 2020 08:03 PM
Last Updated : 27 Oct 2020 08:03 PM

இலங்கை கடற்படை தாக்குதல்; தூதரக ரீதியாக எச்சரிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு வேண்டுகோள்

சென்னை

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறிக்கும் இலங்கை அரசுக்கு மத்திய அரசு எவ்விதத்திலும் துணைபோகக் கூடாது. இலங்கை கடற்படையினர் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று விடுத்துள்ள அறிக்கை:

''கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்களைக் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்வதும், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும் - அவர்களின் மீன்பிடிப் படகுகளை ஈவு இரக்கமின்றி அடித்து உடைத்துச் சேதப்படுத்தி - வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்வதும் இலங்கைக் கடற்படையினரின் தொடர்கதையாகி வருகிறது.

இன்று நடைபெற்ற தாக்குதலில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் - மற்ற மீனவர்கள் உயிர் தப்பித்தால் போதும் என்றும் கருதித் திரும்பி வந்துவிட்டார்கள் என வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கிறது.

இலங்கை நாட்டின் கடற்படையினர் - நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதையும் - அவர்கள் மீது கொடும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கல் வீசுவதும் இரு நாட்டு நல்லுறவுகளுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத அணுகுமுறை. மீனவர்களை அச்சுறுத்தி மனித உரிமையை - சர்வதேச விதிமுறைகளை மீறும் அப்பட்டமான அடாவடிப் போக்காகும்.

ஆனால், நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் - தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் - அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது.

தங்களின் தினசரி வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கும் மீனவர்கள் நலனில் பாராமுகமாக மத்திய பாஜக அரசும் - அந்த அரசுக்கு அழுத்தம் தராமல் அதிமுக அரசும் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே, இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் - தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணைபோகக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x