Published : 27 Oct 2020 07:13 PM
Last Updated : 27 Oct 2020 07:13 PM
தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் எதிரான கட்சி பாஜக என காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் விமர்சித்துள்ளார்.
மதுரையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் செயலரும் தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் தலைமை வகித்தார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தலித் பெண்கள் மீதான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. மத்திய, உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.
தமிழகத்திலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிராகப் பல குற்றங்களும் அரங்கேறுகின்றன.
கரோனாவின் தீவிரத் தன்மையை மத்திய அரசு உணரவில்லை. இத்தொற்று குறித்து மார்ச் மாதமே முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக, அந்நேரம் அமெரிக்க அதிபரை வரவேற்பதில் முனைப்பு காட்யது. தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. தற்போது, இலவச தடுப்பூசி என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
பண மதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தை பாதாளத்திற்கு கொண்டு சென்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் போல காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. சாமானியர்கள் , நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கின்றனர்.
பஞ்சாப், ஹரியாணா போன்ற பகுதிகளில் விவசாயிகள் பக்கம் ராகுல் காந்தி நிற்கிறார். ஆனால், தமிழக முதல்வரோ விவசாயி எனக் கூறி பச்சைத் துண்டு தலைப்பாகை கட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்தை அவர் எதிர்க்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தாத கட்சிகள் பாஜக, அதிமுக. ஓபிஎஸ் - இபிஎஸ் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றனர்.
இந்த நேரத்திலும் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் எதிரான கட்சி பாஜக.
கிராமசபை கூட்டங்கள் ரத்து பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டத்திற்கு எதிரானது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் காலம் தாழ்த்துவது பாஜகவின் அழுத்தமே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT