Published : 27 Oct 2020 03:44 PM
Last Updated : 27 Oct 2020 03:44 PM
பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என, மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முன்னாள் எம்.பி-யுமான கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (அக். 27) வெளியிட்ட அறிக்கை:
"கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தற்போதைய நிலையில், சட்டத்தில் இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
சட்டத்தில் இடமிருக்கிறதோ இல்லையோ, ஆனால் சமூக நீதிப்படி, சமுதாய தர்மப்படி இது நீதியாகாது; சரியாக இருக்காது. பல்வேறு சமூக பொருளாதார காரணங்களுக்காக நமது தேசத்தின் பெருந்தலைவர்களான காமராஜ் போன்ற தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் மற்றத் துறைகளிலும் இட ஒதுக்கீடு வேண்டுமென பல்வேறு அரிய முயற்சிகள் செய்து நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய தொண்டாற்றினர்.
இப்போது அந்தத் தலைவர்களின் தியாக வேள்வி இன்றைக்கு மக்களுக்கு மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி. சட்ட சிக்கலாலோ, வாத பிரதிவாத பிரச்சினைகளாலோ சரியென கருதப்படாத சமுதாய நலன் சம்பந்தமான எந்தப் பிரச்சினையிலும் நாம் தலையிட்டு அதை மாற்றி சரி செய்யலாம். அதற்கான வாய்ப்பும், வழி வகையும நமது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அந்த வகையில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.
அவசரச் சட்டம் போன்ற ஏதோ ஒரு வகையில் இந்த சமூக நீதியை பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் ஒதுக்க வேண்டிய ஒதுக்கீட்டை நிறைவேற்றித் தரவேண்டும். பிரதமர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒருவேளை அது நடக்காமல் போனால் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த சூழ்நிலையில், நல்ல பதில் கிடைக்காமல் போனால், போராட்டத் தேதியை மிக விரைவில் அறிவிப்பேன்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT