Published : 27 Oct 2020 02:57 PM
Last Updated : 27 Oct 2020 02:57 PM
அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த் தாக்குதல் தொடுத்துவிடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்கு உரியது என இலங்கைக் கடற்படைத் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை, படகுகளில் இருந்து கற்களை வீசித் தாக்கி இருக்கிறது. இதனால் ஒரு மீனவர் மண்டை உடைந்தது; பலர் ரத்தக் காயம் அடைந்துள்ளனர். மீன்பிடிப்பதற்காகத் தமிழக மீனவர்கள் விரித்து இருந்த நூற்றுக்கணக்கான மீன் வலைகளையும், இலங்கைக் கடற்படையினர் அறுத்து எறிந்துள்ளனர்.
இன்று நேற்று அல்ல; கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்; படகுகளைப் பறிமுதல் செய்தனர்; பெருந்தொகையைத் தண்டமாக வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால்கூட, உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த் தாக்குதல் தொடுத்துவிடும். ஆனால், தமிழக மீனவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகும்கூட, இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா எச்சரிக்கை கூடச் செய்தது இல்லை என்பது வேதனைக்குரியது. இழப்பீடு எதுவும் பெற்றுத் தந்ததும் இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்ததுதான். அதை மீட்கக் கோரி, தமிழக மக்கள் எழுப்புகின்ற குரலை, இந்திய அரசு கண்டுகொள்வது இல்லை. தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கு, கச்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை, நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்”.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT