Published : 27 Oct 2020 02:39 PM
Last Updated : 27 Oct 2020 02:39 PM
புதுச்சேரியில் இன்று புதிதாக 147 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை. குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் 3,570 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-72, காரைக்கால்-10, ஏனாம்-30, மாஹே-35 என மொத்தம் 147 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 588 ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.71 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 34 ஆயிரத்து 482 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 1,895 பேர், காரைக்காலில் 181 பேர், ஏனாமில் 50 பேர், மாஹேவில் 70 பேர் என 2,196 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியில் 1,354 பேர், காரைக்காலில் 53 பேர், ஏனாமில் 65 பேர், மாஹேவில் 73 பேர் என 1,545 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 3,741 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 128 பேர், காரைக்காலில் 13 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 21 பேர் என 163 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 153 (87.45 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 626 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 56 ஆயிரத்து 349 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
கடந்த இரு தினங்களாக மாநிலத்தில் உயிரிழப்பு இல்லை. புதுச்சேரியின் மொத்த எண்ணிக்கையில், 3 லட்சம் (20 சதவீதம் பேர்) பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுப்பது நாளை இரவுக்குள் முடிந்துவிடும்.
இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், வீடுகளில் என்ன நிலையில் உள்ளனர், வேறு என்ன பாதிப்பு இருக்கிறது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.
கடந்த ஒரு மாதமாக உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அதற்காக கரோனா இல்லை என்று பொதுமக்கள் நினைக்கக்கூடாது. சுகாதாரத்துறை எந்த அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் விழிப்போடும், ஒத்துழைப்போடும் இல்லாவிட்டால் கரோனாவை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஒரு நாள் குறையவும், ஒரு நாள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வதைக் கடைப்பிடித்தால் கண்டிப்பாக கரோனா அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் மக்கள் அனைவரும் இவற்றைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT