Published : 27 Oct 2020 01:59 PM
Last Updated : 27 Oct 2020 01:59 PM

பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் திடீர் மரணம்

சென்னை

கடந்த ஆண்டு தமிழகத்தைப் பரபரப்பாக்கிய திருச்சி நகைக் கொள்ளையில் தொடர்புடையவர் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன். இவர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

தென்னிந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள நகை, பணத்தைக் கொள்ளை அடித்து பவாரியா கொள்ளையன்போல் தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு போலீஸாரிடம் சிக்காத முருகன் கடந்த ஆண்டு இதே மாதம் திருச்சியில் நடந்த நகைக்கொள்ளையில் சிக்கினார். மூன்று மாநிலங்களில் சாமர்த்தியமாகக் கொள்ளை அடித்து சிக்காத முருகன் குறித்த பல்வேறு தகவல்கள் அப்போது வெளிவந்தன.

முருகன் வெளிச்சத்துக்கு வந்த கதை:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரம்மாண்டமான மூன்றடுக்கு நகை மாளிகை லலிதா ஜுவல்லரி. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த நகைக் கடையில் கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் கீழ்தளத்தில் உள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு கொள்ளையர்கள் முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு, சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்துப் பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் கருதினர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில் திருவாரூர் அருகே நடந்த வாகனச் சோதனையில் மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவரிடம் திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 13 கிலோவில் 5 கிலோ நகைகள் இருந்தன.

அதன் பின்னர் வழக்கு தமிழக கொள்ளையர்கள் பக்கம் திரும்பியது. காரணம், மடப்புரம் மணிகண்டன் திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பது தெரியவந்தது. முருகன் என்ற பெயரைக் கேட்டாலே தென்மாநில போலீஸாருக்கு எல்லாம் சிம்ம சொப்பனம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு முழுவதும் முருகன் கூட்டாளிகளுடன் அரங்கேற்றிய கொள்ளைகள் நூறு கோடி ரூபாயைத் தாண்டும்.

கர்நாடகாவில் ஒரு முறை சிக்கிய முருகன் அதன்பின்னர் இதுவரை சிக்கவே இல்லை. தமிழக போலீஸார் தனிப்படை அமைத்து 50 முறைக்கு மேல் முருகனைப் பிடிக்க படையெடுத்தும் முடியவில்லை. தென்னிந்தியா முழுவதும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு அதுவரை சிக்காத கொள்ளையன் திருவாரூர் முருகன் அப்போதுதான் ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் எனக் கைவரிசை காட்டிய திருவாரூர் முருகனைப் பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு போலீஸார் களம் இறங்கினர்.

முதலில் போலீஸார் நடத்திய விசாரணையில் 2018 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் 19க்கும் மேற்பட்ட தொடர் கொள்ளைகள் நடந்தன. அனைத்திலும் கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை குறித்து விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருவாரூர் முருகன் கைவரிசை இருந்ததும் கூட்டாளிகள் இந்த கொள்ளைச் சம்பவங்களை நடத்தியதும் தெரியவந்தது.

வாக்கி டாக்கி கொள்ளையர்கள்

இவர்கள் கடைசியாக வெளிப்பட்டது கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா நகரில் பெரிய அளவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில். இதில்தான் முருகன் குறித்தும் அவரது கும்பல் குறித்தும் தகவல் வெளியானது. நவீன முறையில் வாக்கி டாக்கி உதவியுடன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடுவது இவர்கள் வழக்கம். இவர்கள் பெயரே வாக்கி டாக்கி கொள்ளையர்கள்தான் எனச் சொல்லப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 கோடி கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளைக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இதில் முக்கியக் குற்றவாளி திருவாரூர் முருகன். இவரது கூட்டாளிகள் தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆந்திராவில் கொள்ளையடித்தால், கேரளாவுக்குத் தப்பிச் செல்வது, கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் தப்பி வருவது என்று நான்கு மாநில போலீஸாருக்குத் தண்ணீர் காட்டும் இவர்களில் முருகன் யாரிடமும் சிக்கியதே இல்லை.

மூளையாகச் செயல்பட்ட திருவாரூர் முருகன்

திருவாரூர் முருகன்தான் கொள்ளையில் மூளையாகச் செயல்படுவார். ஒரு ஏரியாவைத் தேர்வு செய்தால் அங்கு பகலில் போலீஸார் போல் ரோந்து வருவார்கள். பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிடும் இவர்கள் அந்த வீட்டில் பூட்டுக்கு இடையே விளம்பரம் செய்யும் நோட்டீஸ் அல்லது ஏதாவது பேப்பரைச் செருகிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆட்கள் இருக்கும் வீடுகள் என்றால் பூட்டைத் திறப்பவர்கள் பேப்பரைத் தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படி பேப்பர் இல்லாத வீடுகள் பக்கம் செல்லவே மாட்டார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மேல் பேப்பர் எடுக்கப்படாமல் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். திருடுவதற்கென்று தனியாக உபகரணம் ஒன்றைத் தயாரித்து வைத்துள்ளார்கள். அதைக் காட்டினால் மற்ற கொள்ளையர்கள் பிரதி எடுத்துவிட வாய்ப்புண்டு என்பதால் போலீஸார் அதைத் தவிர்த்துவிட்டனர்.

தங்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற எவ்வளவு பெரிய கட்டிடமாக இருந்தாலும் கயிறு வீசி ஏறி உள்ளே இறங்கவும் தயாராக பிரத்யேகக் கயிறுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சுவரைத் துளையிடக் கருவிகளும் வைத்திருப்பார்கள். இதற்காகப் பயிற்சியும் எடுத்துள்ளனர். கொள்ளை அடிக்கும் சமயம் வேவு பார்க்க ஒருவர், உள்ளே பல அறைகளில் கொள்ளை அடிக்கும் இருவர் என மூன்று பேர் ஆளுக்கொரு வாக்கி டாக்கியுடன் களத்தில் இறங்குவார்கள். கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்த மாட்டார்கள்.

வெளியே நிற்பவர் வெளியில் உள்ள நிலையை வாக்கி டாக்கியில் அவ்வப்போது தெரிவிப்பார். தேவையான உதவிகள் செய்வார். உள்ளே திருடச் செல்பவர்கள் தங்களுக்குள்ளும் வாக்கி டாக்கியில் பேசிக்கொள்வார்கள். இதனால் கொள்ளை நடந்த பின்னர் போலீஸார் அப்பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை எடுத்தாலும் இவர்கள் சிக்காமல் இருந்தனர். அதனால்தான் இவர்களை வாக்கி டாக்கி கொள்ளயர்கள் என்பார்கள். இவை அவ்வளவும் திருவாரூர் முருகனின் திட்டமிடல்களே.

கொள்ளையடித்த பின்னர் கூட்டாளிகள் லோகநாதன், காளிதாஸ் போன்றவர்களிடம் தங்க நகைகளைக் கொடுத்துவிடும் முருகன் ரொக்கப் பணத்தை வைத்து ஜாலியாக அண்டை மாநிலங்களுக்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுவார். நகைகளை வாங்கிய லோகநாதன், காளிதாஸ் அதை உருக்கி விற்றுக் காசாக்குவார்கள்.

அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தைக் கொள்ளையர்கள் அக்கவுண்ட்டில் போட்டுவிடுவார்கள். இதுதான் இவர்கள் ஸ்டைல்.

முருகனின் தனித்திறமை

செல்போனைப் பயன்படுத்தாமல், குடும்பத்தினருடன் சொகுசுக் காரில் வருவது, விடுதி அறையில் தங்காமல் காரிலேயே தங்கி நோட்டம் பார்த்துக் கொள்ளையடிப்பது, அங்கும் செல்போனைப் பயன்படுத்தாமல் வாக்கி டாக்கி பயன்படுத்துவது என வெகு ஜாக்கிரதையாக திட்டம் போட்டுக் கொள்ளையடித்த முருகன் போலீஸாருக்குப் பெரும் தலைவலியாக இருந்தார். இந்நிலையில் திருச்சி கொள்ளையில் முருகன் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்ததும் துரிதமாகச் செயல்பட்ட போலீஸார் வெகு சாமர்த்தியமான துப்பு துலக்கல் மூலம் முருகனைக் கண்டுபிடித்தார்கள்.

ஆனால், முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை தமிழக போலீஸார் காவலில் எடுத்து நகைகளை மீட்டனர். அதிக வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் இருந்ததாலும் பெங்களூருவில் சரணடைந்ததாலும் பெங்களூரு சிறையில் மீண்டும் முருகன் அடைக்கப்பட்டார்.

திருவாரூர் முருகன் ஏற்கெனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோயாளி. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்து. இதையடுத்து பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்தது. சில மாதங்கள் உயிர் வாழ்வதே கடினம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முருகன் வாய் பேச முடியாத நிலையில் எச்ஐவி தொற்றும் அதிகமான நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்தார். கடுமையான நோய்களுடன் போராடி வந்த முருகன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். அவரது மரணத்தை பெங்களூரு போலீஸார் உறுதி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x