Published : 27 Oct 2020 12:58 PM
Last Updated : 27 Oct 2020 12:58 PM
ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், ஒகேனக்கல், ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு இடையில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களைச் சேர்ந்த பலர், கடந்த 3 நாட்களாக ஏற்காட்டுக்கு வரத் தொடங்கினர். இதனால், ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறையின் அண்ணா பூங்கா, ஏரிப் பூங்கா, ரோஜாத் தோட்டம், மரபணுப் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டியது. இதன் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு கடந்த 2 நாட்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வருவாய் கிடைத்தது.
இதனிடையே, சாரல் மழை ஏதுமின்றி மிதமான வெயிலும், இதமான குளிரும் நிலவியது, பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இதனால், ஏற்காட்டின் காட்சி முனைப்பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் பயணிகளை அதிகளவில் காண முடிந்தது. ஏற்காட்டில் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக தங்கள் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்தாலும், படகு சவாரி இல்லாதது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
ஒகேனக்கல்லில் கொண்டாட்டம்
கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதத்தில் நாடு முழுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை தொடர்ந்து வந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பி வாழும் தொழிலாளர்களின் தொடர் கோரிக்கையின் பலனாக கடந்த 22-ம் தேதி பிற்பகலில் இருந்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இந்நிலையில், விஜயதசமி விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதனால் நேற்று காலை முதலே ஒகேனக்கல் களைகட்டத் தொடங்கியது.
மாவட்ட நிர்வாகம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். அதேபோல எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளும் இடம், பிரதான அருவி, மீன் மார்க்கெட், மீன் சமைத்து தரும் சமையல் கூடம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வரத்து காரணமாக கரோனா பரவலுக்கான சூழல் உருவாகி விடாமல் இருக்கவும், திருட்டு, விபத்து உள்ளிட்ட இதர அசம்பாவித சம்பவங்கள் நடந்திடாமல் தடுக்கவும் ஒகேனக்
கல் போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினரும் ஒகேனக்கல் பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
7 மாதங்களுக்கு பின்னர், ஒகேனக்கல்லில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள், பழச்சாறு கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட வர்த்தக மையங்களிலும் நேற்று விறுவிறுப்பான வர்த்தகம் நடந்ததால் வியாபாரிகளும் உற்சாகம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT