Published : 27 Oct 2020 12:27 PM
Last Updated : 27 Oct 2020 12:27 PM

அறவழியில் போராட வந்தவர்களைக் கைது செய்வதா?- தமிழக அரசுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்

பெண்களைக் கொச்சைப்படுத்தியவர்களைக் கண்டித்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளை தமிழக காவல்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோயில் செல்வதற்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அப்போது அவருக்கு பாஜக சார்பில் விமான நிலையத்தில் வவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவோரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த பாஜக நிர்வாகிகளைத் தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

50% இட ஒதுக்கீடு வாய்ப்புகள் குறைவு என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் கூறி இருந்தது. உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இதை அமல்படுத்த பாஜக சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும்.

மத்திய அரசைக் குறை சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக கந்தசஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுவோரையும் பாதுகாக்கும் நடவடிக்கையைத்தான் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அவர்களது ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அவர்களைப் பாதுகாத்தே வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ரஜினி கட்சி தொடங்கவில்லை. இருப்பினும், பாஜகவுடன் கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியைப் பொறுத்துதான்.

சடட்ப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்படுத்தும் பணிகள் தற்போது இருந்தே தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இது கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் பலமாக அமையும்" என்று எல்.முருகன் தெரிவித்தார்.

’பாஜக ரவுடிகள் மிக்க கட்சியாக உள்ளது’ என்று டி.கே.எஸ் இளங்கோவன் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த எல்.முருகன், "தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தியவர்களைத் தமிழ்ச் சகோதரிகளே நடமாட விடமாட்டார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம்” எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x