Published : 27 Oct 2020 12:17 PM
Last Updated : 27 Oct 2020 12:17 PM
குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூக நீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
''இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.
அவர் குடியரசுத் தலைவரானபோது "நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூக நீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று மறைந்த தலைவர் கருணாநிதி மனமார வாழ்த்தியது, இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் தலைவர். பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணன்தான் திறந்து வைத்தார்.
மறைந்த குடியரசுத் தலைவருக்கும், மறைந்த தலைவர் கருணாநிதிக்கும் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான, ஆழமான நட்புறவு மிளிர்ந்து கொண்டிருந்ததை நானறிவேன்.
கே.ஆர்.நாராயணன் விட்டுச் சென்ற சமூக நீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம். அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT