Published : 27 Oct 2020 06:37 AM
Last Updated : 27 Oct 2020 06:37 AM

அசாமில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வந்தடைந்தது

ஏகாம்பரத்தின் உடலை சுமந்து வரும் ராணுவ வீரர்கள். (உள்படம்) உயிரிழந்த ராணுவ வீரர் ஏகாம்பரம்.

காஞ்சிபுரம்

அசாமில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் நேற்று சொந்த ஊரை வந்தடைந்தது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் நிலைத் தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த காஞ்சிபுரம் வெள்ளைகேட் அடுத்த செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரம்(42) விபத்தில் உயிரிழந்தார்.

இவரது தந்தை குப்பன். தாய் நங்கை. இவருக்கு குமாரி(35) என்ற மனைவியும், ஆதித்யா(16) என்ற மகனும், ஜெனி (14) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2000-ம்ஆண்டில் ராணுவப் பணியில் சேர்ந்த அவர் தொடர்ந்து அந்தப் பணியில் இருந்தார். அவர் பணி ஓய்வுபெற 6 மாதங்களே இருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது உடல் அசாம் மாநிலத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. தேசியக் கொடி போர்த்தப்பட்டு கொண்டு வரப்பட்ட அவரது உடலைப் பார்த்து குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் கதறி அழுதனர். அவர் பணியின்போது உயிரிழந்த காரணத்தால் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் எடுத்து வரப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உட்படபலர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஏகாம்பரம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x