Published : 20 May 2014 04:59 PM
Last Updated : 20 May 2014 04:59 PM

மு.க.அழகிரி ஆதரவாளர் தற்கொலை நாடகம்- மடக்கிப் பிடித்தது போலீஸ்

திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் அவர் திமுக வேட்பாளர்களை எதிர்த்து வேலை செய்ததால், கட்சித் தலைமை நிர்வாகிகள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் உச்சகட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘மு.க.அழகிரி என்கிற மகன் இருப்பதை மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது’என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். இதனால் மு.க.அழகிரி வட்டாரம் மேலும் சூடாகியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர் களைத் தொடர்பு கொண்ட ஒருவர், ‘அஞ்சாநெஞ்சன் அழகிரி பேரவையைச் சேர்ந்த நான், பகல் 1.30 மணியளவில் மாவட்ட நீதிமன்றம் முன் தீக்குளிக்கப் போகிறேன்’ எனக்கூறி இணைப்பைத் துண்டித்தார். இதையடுத்து டி.வி., நாளிதழ் செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்படக் கலைஞர்கள் அங்கு திரண்டனர். மேலும் உளவுத் துறை மற்றும் அண்ணாநகர் போலீஸாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அந்த நபர் யாரெனத் தெரியாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நின்ற சந்தேக நபர்களைப் பிடித்து விசாரித்து வந்தனர். பகல் 1.40 மணிக்கு அங்கு வந்த ஒருவர், ‘அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க’ என கோஷமிட்டபடி, தான் கொண்டுவந்திருந்த துண்டுப் பிரசுரங்களை செய்தியாளர்களிடம் வழங்கினார். அதன்பின் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்ற முயன்றார். அதற்குள் போலீஸார் தடுத்து அந்த பாட்டிலைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை ஆட்டோவில் ஏற்றி, அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும், மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீஸார் கூறும் போது, ‘அவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்தால் தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரிய வில்லை. அதுபோல் நாடகமாடி பத்திரிகைகளில் செய்தி வரவே இப்படி செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றனர்.

அறிவாலயம் நோக்கி திரள ஆணையிடு

ரவிச்சந்திரன் கொடுத்த துண்டுப் பிரசுரத்தில் மு.க அழகிரியின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அதற்கருகே ‘அஞ்சா நெஞ்சனே, என் ஆருயிரே.. அவர் பாவம், இவர் பாவம் என்ற ஈரமனதை விட்டுவிட்டு, எஃகு மனதை ஏற்று கழகத்தையும், தலைவரையும் காக்க அறிவாலயம் நோக்கி ஆர்ப்பரித்து அலைகடலெனத் திரள ஆணையிடு என் தலைவா. இதற்காக உன் அன்புத்தம்பியான நான் என் தேகத்தை தீக்கு இரையாக்குகிறேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x