Published : 26 Oct 2020 06:53 PM
Last Updated : 26 Oct 2020 06:53 PM
திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி 3 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.26) நிரம்பியது. இங்குள்ள ஏரிக் கால்வாய்களைத் தூர்வாரினால் சுமார் 60 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், ஜவ்வாது மலையடிவாரத்தில் குரும்பேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட களர்பதி - எம்ஜிஆர் நகர் இடையே சுமார் 42 ஹெக்டேர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில் பெய்யும் கனமழையால் இந்த ஏரி நிரம்பும்.
கடந்த 2017-ம் ஆண்டு பெய்த கனமழையால் குரும்பேரி பெரிய ஏரி, முழுக் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறிது. இதைத் தொடர்ந்து, போதிய மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக பெரிய ஏரி நிரம்பாமல் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால், இப்பகுதியில் விவசாயம் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஜவ்வாது மலைத்தொடரில் பெய்து வரும் கனமழையால் குரும்பேரி பெரிய ஏரி இன்று நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதையறிந்த விவசாயிகள், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, கற்பூரம் ஏற்றி, மலர் தூவித் தண்ணீரை வரவேற்றனர். பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது, முதலில் சின்னகொல்லன் ஏரிக்குச் செல்கிறது. அங்கிருந்து ஒட்டேரிக்கும் உடையானூர், கொல்லன் ஏரி, புல்லான் ஏரி என 5 ஏரிகளுக்கும் சென்றடைகிறது.
தற்போது, உடையானூர் ஏரிக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் ஏரிக்கால்வாய் வழியாகச் செல்லாமல் அருகேயுள்ள விவசாய நிலங்களில் நுழைய வாய்ப்புள்ளது. இதனால் விளை நிலங்கள் பாழடையும் என்பதால், பொதுப்பணித்துறையினர் உடனடியாக நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் 5 ஏரிகளுக்கும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்துத் திருப்பத்தூர் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் குமார், 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறியதாவது:
''திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. இதில், சமீபத்தில் பெய்து வரும் மழையால் குரும்பேரி பெரிய ஏரி, சிம்மணபுதூர் ஏரி, பொம்மிகுப்பம் ஏரி ஆகிய 3 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 25 சதவீதத்துக்கும் குறைவாக 6 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. மற்ற ஏரிகளில் நீர்வரத்து இல்லை.
குரும்பேரி பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் சீராகச் செல்ல போதிய கால்வாய் வசதிகள் உள்ளன. சில இடங்களில் தூர்வாரப்படாமல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அப்பணிகள் சரி செய்யப்படும். குரும்பேரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் சுற்றுவட்டாரத்தில் சுமார் 60 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். தண்ணீர்ப் பஞ்சமும் தீரும்.
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க ஓடையில் தற்போது நீர்வரத்து குறைவாகவே காணப்படுகிறது. அணையின் மொத்தக் கொள்ளளவு 112.20 கன அடியாகும். தற்போது நீர்மட்டம் 75.47 கன அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2.42 கன அடியாக உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால், நீர்வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளும் ஆங்காங்கே நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.''
இவ்வாறு உதவிப் பொறியாளர் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT