Published : 26 Oct 2020 02:13 PM
Last Updated : 26 Oct 2020 02:13 PM

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் விஜயதசமி நாள் மாணவர் சேர்க்கை

பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்குகிறார் வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம்.

திருச்சி

விஜயதசமி நாளான இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

விஜயதசமி நாளில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முதலில் பள்ளிகளில் சேர்ப்பது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விஜயதசமி நாளான அக்.26-ம் தேதி அங்கன்வாடியில் பயிலும் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் நாளிலேயே அவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று (அக். 26) மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையை வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் நேரில் பார்வையிட்டுக் கண்காணித்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் ஆசாதேவி உள்ளிட்ட ஆசிரியர்கள், குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோரை வரவேற்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் விரல்களைப் பற்றிக்கொண்டு நெல்மணிகள், அரிசி, மஞ்சள் ஆகியவற்றில் தமிழின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுதப் பழக்குவித்தனர். தொடர்ந்து, புதிதாகச் சேர்ந்த குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x