Published : 25 Oct 2020 07:06 AM
Last Updated : 25 Oct 2020 07:06 AM

மருது பாண்டியர்கள் நினைவு தினம்; திருப்பத்தூரில் சிலைகளுக்கு ஓபிஎஸ் மரியாதை: அமைச்சர்களும் மாலை அணிவிப்பு

திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெரிய மருது, சின்ன மருது எனப்படும் மருது பாண்டியர்களின் 219-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவிடத்தில் காலை 7 மணிக்கு அறங்காவலர் குழுத் தலைவர் ராமசாமி குடும்பத்தினர் தலைமையில் பொங்கல் வைத்து மரியாதை செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் மருது பாண்டியா்களின் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன் ஆகியோர் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மருது பாண்டியா்களின் நினைவுத் தூணுக்கும் மரியாதை செலுத்தினர். பிறகு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிமுக அரசு தான் மருது பாண்டியர்களுக்கு சிலைகள் வைத்தது. மருது சகோதரர்களின் வீரம், புகழ், கீர்த்தி உலகம் இருக்கும் வரை சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x