Published : 25 Oct 2020 06:40 AM
Last Updated : 25 Oct 2020 06:40 AM
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரத்தில் ரூ.42.16 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கியதும், இந்ததடுப்பணையை உள்ளாவூரில் அமைக்க பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் சில விவசாயிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தியதை அடுத்து, தடுப்பணை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சி ஆட்சியர் பொன்னையா தலைமையில் கிராம பொதுமக்கள் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தற்போது கட்டப்படும் தடுப்பணை மூலம் வலதுபுறத்தில் நீரை கொண்டு செல்ல கால்வாய்இல்லை என்ற புகாரின் அடிப்படையில், ஆய்வு செய்தபோது பினாயூர், அரும்புலியூர் ஏரிக்கு நீர் செல்ல கால்வாய்கள் இருப்பது தெரியவந்தது. உள்ளாவூர்பகுதியில் தடுப்பணை கோரும்இடத்தையும் ஆய்வு செய்தோம்.அங்கு 7 மீ அளவுக்கு பள்ளம் உள்ளதால் அந்த இடத்தில் தடுப்பணை அமைக்க தற்போது தேவைப்படுவதைவிட 3 மடங்கு நிதி தேவை அதிகரிக்கும்.
மேலும் இப்பகுதிக்கு அருகில்இன்னொரு தடுப்பணை அமையஇருப்பதால் உள்ளாவூரில் தடுப்பணை அமைக்க சாத்தியமில்லை. பொதுப்பணித் துறையினரால் தற்போது கட்டப்படும் தடுப்பணையையொட்டிய பினாயூர், அரும்புலியூருக்கு செல்லும் வாய்க்கால்களை சீரமைக்க கனிம வளத் துறை மூலம் ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வல்லுநர்களின் ஆலோசனைப்படியும், பெரும்பான்மை மக்களின் கருத்துப்படியும் தற்போது கட்டப்படும் இடத்திலேயே இன்று முதல் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்கும். அந்த தடுப்பணை அமைவதை தடுக்கும் வகையில் செயல்படுவோர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாலாறு கூட்டமைப்பு புறக்கணிப்பு
தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறும்போது, “முதல்வர் அடிக்கல் நாட்டியஉள்ளாவூரிலேயே தடுப்பணைக்கான பணிகள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி நடைபயணமாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். பழையசீவரம் பகுதியில் பணிகளை தொடர்ந்தால் நீதிமன்றம் மூலம் அதை தடுத்துநிறுத்தவும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT