Last Updated : 25 Oct, 2020 06:27 AM

 

Published : 25 Oct 2020 06:27 AM
Last Updated : 25 Oct 2020 06:27 AM

கரோனா குறித்து போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க விக்கிபீடியா - உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடவடிக்கை: நம்பகமான தகவல்கள் வட்டார மொழிகளில் வெளியிடப்படும்

சென்னை

கரோனா பற்றிய போலி செய்திகள்பரவுவதைத் தடுக்க விக்கிபீடியா அறக்கட்டளையுடன் இணைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதேநேரம், விக்கிபீடியா இணையதளத்தில் கரோனா தொற்று தொடர்பான நம்பகமான தகவல்களை பொதுமக்கள் இலவசமாகத் தெரிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 215 நாடுகளைச் சேர்ந்த 4 கோடியே 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 கோடியே 84 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 11 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாக பல்வேறு வதந்திகளும், போலி செய்திகளும் அதிக அளவில் இணையதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.இதைத் தடுக்க கரோனா தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட செய்திகளை விக்கிபீடியா தளத்தில் பொதுமக்கள் இலவசமாக அறிந்து கொள்ள உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் இதுகுறித்து கூறியதாவது:

சுகாதாரம் குறித்த நம்பகமான தகவல்கள் பொதுமக்கள் அனைவருக்கும் சென்றடைவது முக்கியம். பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக உணர கரோனா தொற்றுகுறித்த உரிய தகவல்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

175 மொழிகளில் கிடைக்கும்

ஆகவே கரோனா குறித்து உலகசுகாதார அமைப்பு வெளியிடும் காணொலிகள், படவிளக்கங்கள், 5,200-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளிட்ட தகவல்கள் விக்கிபீடியாவில் 175 மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்கள் அந்தந்த நாடுகளின் வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். விக்கிபீடியாவின் 2 லட்சத்து 50 ஆயிரம் தன்னார்வலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x