Published : 30 Oct 2015 09:31 PM
Last Updated : 30 Oct 2015 09:31 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் கிராம சுய வேலைவாய்ப்பை நடைமுறைப்படுத்த அரசு நிதியில்லாததால், தனியாரை நாடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்களுக்கு தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயார் செய்வது குறித்த பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் காணவைக்க மகளிர் திட்டம் மூலம் கிராம சுயவேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மறுசீரமைக்கப்பட்ட இத்திட்டத்தில் அளிக்கப்படும் சுயதொழில் பயிற்சி கிராமப்புற பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் ஏழை மகளிரை தேர்வு செய்து இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 6 பேர் வீதம் படித்த பெண்கள் அடங்கிய தொகுதிவழி நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய மற்றும் பெரிய கிராமங்களைப் பொறுத்து பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அரசு வழங்குகிறது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக அரசு நிதி கிடைக்கவில்லை. அதே நேரம் தொகுதி வழிநடத்துநர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியாரை அணுகி, நிதியுதவி பெற்று பயிற்சி வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெண்களுக்கான கிராம சுயவேலைவாய்ப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் கிராமம் வாரியாக தொகுதி வழிநடத்தும் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து `தி இந்து’ நாளிதழிடம், பாதிக்கப்பட்ட தொகுதி வழிநடத்தும் பெண்கள் கூறியதாவது:
எங்களுக்கு மாத ஊதியமாக மகளிர் திட்டம் மூலம் ரூ. 7,425 வழங்கப்படுகிறது. சமீப காலமாக கிராமப்பகுதியில் உள்ள ஏழை பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் உள்ள இந்த நல்ல திட்டத்துக்கு தற்போது நிதியுதவி வழங்கப்படவில்லை.
இதனால், தனியார் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிட்அம் நிதியுதவிக்காக கெஞ்சவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதேவேளை மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடியிலும் உள்ளோம்.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக 120 பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி வழங்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி அடிப்படை விவரங்கள், ஆன்லைன் பதிவு மற்றும் பயிற்சிபெற்ற மகளிர் விவரம் குறித்த குறுந்தகடு போன்றவை எங்கள் சொந்த செலவிலேயே அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
மேலும் இலவச பயிற்சி பெறும் கிராம பெண்களை அவ்வப்போது நேரடியாக சென்று சந்தித்து ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது. அவர்களை அணுகவும், சம்பந்தப்பட்ட மகளிர்திட்ட அலுவலர்களையும் தொடர்புகொள்ளவும் வேண்டிய செலவை நாங்களே ஏற்கவேண்டியுள்ளது.
தற்போது, அரசு நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 95 கிராம ஊராட்சிகளிலும் பயிற்சி பெறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாமல் போய்விடும். தொடர் மனஉளைச்சலால் மகளிர்திட்ட சுய வேலைவாய்ப்புக்கான தொகுதி வழிநடத்துநர் பணியை விட்டு விலகும் மனநிலையில் உள்ளோம்’ என்றனர்.
பயிற்சி தொடர ஏற்பாடு
கிராம சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சியில் நிதியின்மையால் தொய்வு ஏற்பட்டுள்ளது குறித்து கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சடையப்ப விநாயக மூர்த்தியிடம் கேட்டபோது, `இதுவரை அரசு நிதி வரவில்லை. விரைவில் வந்து விடும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் கிராமப்புற பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி வழங்குவதில் ஏற்படும் சிரமம் குறித்து தெரிவித்துள்ளோம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிருக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொய்வின்றி நடப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. பெண் தொகுதி வழிநடத்துநர்கள் பாதிக்காதவாறு வழிவகைகள் செய்யப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT