Published : 24 Oct 2020 06:19 PM
Last Updated : 24 Oct 2020 06:19 PM
வேலூர் சரக டிஐஜி அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் வெட்டிக் கடத்திய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் டோல்கேட் பகுதியில் காவல்துறை வளாகத்தில் வேலூர் சரக டிஐஜி அலுவலகம், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் துறை அதிகாரிகளுக்கான விருந்தினர் மாளிகை மற்றும் காவல் அதிகாரிகள் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாகவும் ஆட்கள் நடமாட்டம் உள்ள இந்த வளாகத்தில் நிழல் தரும் வகையில் ஏராளமான மரங்களை நட்டுப் பராமரித்து வருகின்றனர்.
இதில், டிஐஜி அலுவலகம் அருகில் உள்ள இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் நேற்று (அக். 23) நள்ளிரவு வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர். இன்று (அக். 24) காலை அந்த வழியாகச் சென்றவர்கள் எந்த வகையான மரம், எதற்காக வெட்டப்பட்டது என்ற தகவல் தெரியாமல் இருந்துள்ளனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்ற தகவலை அறிந்து திடுக்கிட்டனர். இந்தத் தகவலை அடுத்து வேலூர் வனச்சரகர் ரவிக்குமார், இன்று பிற்பகல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதில், ஒரு மரம் 5 வயதும், மற்றொரு மரம் 7 வயதுள்ள சந்தன மரம் என்றும் ஒவ்வொரு மரத்திலும் சுமார் 2 மீட்டர் அளவுள்ள மரத்துண்டை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியதுடன் கிளைகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
வேலூரில் நேற்று இரவு கனமழை பெய்த நேரத்தில் மர்ம நபர்கள், மரம் அறுக்கும் கருவியைப் பயன்படுத்தி சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெட்டிக் கடத்தப்பட்ட மரங்களின் வயது குறைவு என்பதால் அதன் சந்தை மதிப்பு ரூ.4,000-க்குள் இருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், காவல் துறையினரும் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகம் இருக்கும் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தியிருப்பது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT