Last Updated : 24 Oct, 2020 05:49 PM

 

Published : 24 Oct 2020 05:49 PM
Last Updated : 24 Oct 2020 05:49 PM

நீலகிரி, கோவை, திருப்பூர் வழியாக ஆப்பிரிக்காவுக்கு லட்சக்கணக்கில் இடம்பெயரும் தட்டான்கள்; இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இடைவிடாது பயணம்

கோவை புலியகுளம் பகுதியில் ஆயிரக்கணக்கில் தென்பட்ட குளோபல் வான்டரர் வகை தட்டான்கள்.

கோவை

நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக ஆப்பிரிக்காவுக்கு 'குளோபல் வான்டரர்' வகை தட்டான்கள் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகின்றன.

இயற்கைச் சமநிலையில் தட்டான்கள் (Dragonflies), ஊசி தட்டான்களின் (Damselflies) பங்கு குறிப்பிடத்தக்கது. மலேரியா, டெங்கு போன்றவற்றைப் பரப்பும் கொசுக்கள் லார்வா நிலையில் உள்ளபோதே, அவற்றைத் தட்டான்கள் உணவாக உட்கொள்கின்றன. முழுமையாக வளர்ச்சி அடைந்தபின் காற்றில் பறந்தபடியே சிறு பூச்சிகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு, அவற்றின் எண்ணிக்கையை தட்டான்கள் கட்டுக்குள் வைக்கின்றன. ஆறு, குளங்கள், நெல்விளையும் பூமி என நன்னீர் உள்ள இடங்களில் மட்டுமே இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, தட்டான்கள் இருக்கும் இடங்களில் சூழல் மாசு இல்லாமல் இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் மட்டும் சுமார் 500 வகை தட்டான்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 75-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வளர்ந்த நிலையில் இவற்றின் வாழ்நாள் அதிகபட்சம் 2 மாதங்கள் ஆகும். இதில், தென்னிந்திய நிலப்பரப்பில் அதிகம் காணப்படும் 'குளோபல் வான்டரர்' (Global Wanderer) வகை தட்டான்கள் நீலகிரி, கோவை, திருப்பூர் வழியாக ஆப்பிரிக்கா நோக்கி தற்போது லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகின்றன.

1,000 மீட்டரில் பறக்கும் திறன்

இது தொடர்பாக திருப்பூர் இயற்கை கழகத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறும்போது, "தட்டான்கள் நீண்ட நேரம் பறந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. இவற்றால் பின்நோக்கியும் பறக்க முடியும். 'குளோபல் வான்டரர்' வகை தட்டான்கள் ஏப்ரல்-மே மாதங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தடைகின்றன.

பின்னர், இவற்றின் அடுத்தடுத்த தலைமுறை இந்தியாவில் இருந்து அக்டோபர்-நவம்பர் மாதங்களில் லட்சக்கணக்கில் புறப்பட்டு ஆப்பரிக்கா சென்றடைகின்றன.

இந்தத் தட்டான்கள் 1,000 மீ. உயரத்தில் பறக்கும் திறன் பெற்றவை. வேறு எந்தத் தட்டான்களும் இவ்வளவு உயரத்தில் பறப்பது இல்லை. காற்றின் வேகத்தை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடலைக் கடந்து இவை ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைகின்றன. கடலைக் கடக்கும்போது இவை இடைவிடாது பறந்து செல்கின்றன. உணவு, சாதகமான காலநிலை ஆகியவற்றுக்காக இந்த இடப்பெயர்வு நடைபெறுகிறது.

தட்டான்கள் இடப்பெயர்வு தொடர்பான ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

நீலகிரியில் செயல்படும் 'வின்டர் பிளைத்' அமைப்பைச் சேர்ந்த மனோஜ் சேதுமாதவன், கோவையில் உள்ள இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் (டிஎன்பிஎஸ்) ஒருங்கிணைப்பாளர் அ.பாவேந்தன் ஆகியோர் கூறும்போது, "நீலகிரியில் 27-ம் தேதி முதல் லட்சக்கணக்கில் இந்த வகை தட்டான்கள் தென்படத் தொடங்கின.

பின்னர், அங்கிருந்து இடம்பெயர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி முதல் இவை கூட்டம் கூட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ள தெற்கு திசையை நோக்கிப் பயணித்தன. அங்கிருந்து கேரளா வழியாக அவை இடம்பெயர்ந்து வருவது பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x