Published : 24 Oct 2020 05:46 PM
Last Updated : 24 Oct 2020 05:46 PM
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்புக் காப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது.
தேசியக் கால்நடை இயக்கம் சார்பில் நாடு முழுவதும் கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் அக்.30-ம் தேதி நிறைவடைகிறது. இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்கள் ஆடு மற்றும் மாடுகளுக்குக் காப்பீடு செய்துகொள்ளலாம்.
ஆடுகளுக்கு ரூபாய் 5,000 வரையும், மாடுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் காப்பீடு செய்து கொள்ள இயலும். காப்பீட்டுத் தொகையில் 2 சதவிகிதத் தொகைப் பிரீமியமாகச் செலுத்த வேண்டும். அதில் பட்டியல் இனத்தவருக்கு 70% தொகையையும், இதர வகுப்பினருக்கு 50 சதவீதப் பிரீமியத் தொகையையும் மாநில அரசே மானியமாக செலுத்தி விடுகிறது. கால்நடை வளர்ப்போர் மீதத் தொகையைக் கட்டினால் போதும். எதிர்பாராதவிதமாகக் கால்நடைகள் இறந்துவிட்டால் காப்பீட்டு முதிர்வுத் தொகை முழுவதும் அப்படியே விவசாயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் முழுமையாகத் தெரியாததால் பெரும்பாலான கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்வதில்லை. இதற்கிடையே கொள்ளிடம் அருகே புளியந்துறை ஊராட்சியில் மக்கள் இதுகுறித்த விவரத்தை அறிந்திருக்கவில்லை. அதனால் புளியந்துறை ஊராட்சித் தலைவர் அ.நேதாஜி, மக்களிடம் இத்திட்டம் குறித்து எடுத்துக் கூறியதோடு கால்நடைத் துறையை அணுகி இருதரப்பையும் ஒருங்கிணைத்து இன்று புளியந்துறை ஊராட்சியில் கால்நடைக் காப்பீட்டுத் திட்டத்திற்கான சிறப்பு முகாமை நடத்தினார்.
மயிலாடுதுறை கால்நடைப் பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் முத்துக்குமாரசாமி வழிகாட்டுதலில், உதவி கால்நடை மருத்துவர்கள் சரவணன், ஜனார்த்தனன், சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு புளியந்துறை ஊராட்சி முழுவதும் வீடு வீடாகச் சென்று கால்நடைப் பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.
இதில் "கால்நடைகளைப் பாதுகாப்போம்", "கிராமப்புற ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம்" என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குக் காப்பீடு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT