Published : 24 Oct 2020 05:31 PM
Last Updated : 24 Oct 2020 05:31 PM
புதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறைத் தோட்டத்தில் திறப்பு விழாவுக்கு வந்த முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ ஜான்குமார் மற்றும் அதிகாரிகளைக் கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசுப் பள்ளி எதிரே கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் உள்ளது. இந்தக் கல்லறை, மதில் சுவரால் தடுக்கப்பட்டு 2 பிரிவாக இருக்கிறது. இதில் ஒரு பகுதி எம்எல்ஏ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் நிதி செலவில் நடைபாதை, குடிநீர் வசதி, கழிவறை, மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் இந்த வசதிகள் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று (அக். 24) கல்லறைத் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியுடன் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டிருந்தனர். அதே நேரத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றொரு வழியில் சென்று கல்லறையைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். அவருடன் ஜான்குமார் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
பின்னர் மதில்சுவருக்கு மறுபுறம் உள்ள பகுதிக்கு முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். இதையறிந்த போராட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். உள்ளே செல்ல அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான நாராயணசாமியை மட்டும் உள்ளே அனுமதித்தனர். ஜான்குமார் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளை அனுமதிக்கவில்லை. உள்ளே சென்று பார்வையிட்ட முதல்வர் புனரமைப்புப் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிராங்கிளின் பிரான்சுவா கூறும்போது, "கடந்த காலத்தில் கல்லறை 2 பகுதியாக இருந்தது. அதன்பிறகு இரண்டும் ஒன்றுதான் என்று அறிவிக்கப்பட்டது. கல்லறைப் பகுதியைப் பிரிக்கும் சுவர் நகராட்சிக்குச் சொந்தமானது என்பதால் அகற்றவில்லை. தற்போது மீண்டும் பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு புறத்தைப் புனரமைத்தும், மற்றொரு புறத்தைக் கவனிக்காமலும் விட்டுள்ளனர்.
இரண்டையும் சீரமைத்துத் திறக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தினோம். மதில் சுவரை அகற்றக் கோரி இயக்கத்தின் சார்பிலும், கல்லறை ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும் தொடர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT