Published : 24 Oct 2020 12:55 PM
Last Updated : 24 Oct 2020 12:55 PM

ஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக் காவலர்' ஜெகன்மோகன் ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு  

சென்னை

ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சமூக நீதியை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஆந்திரத்தின் சமூக நீதிக் காவலராக ஜெகன்மோகன் ரெட்டி உருவெடுத்திருப்பதாகவும் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

“அன்புள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு,

ஆந்திர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 56 சமூகங்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியம் அமைத்திருப்பதுடன், அவற்றில் 50%-க்கும் கூடுதலான வாரியங்களின் தலைவர்களாக பெண்களை நியமித்திருக்கிறீர்கள்.

இது சமூக நீதியையும், சமூக முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். இதற்காக பாமக சார்பில் தங்களுக்குப் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

முற்போக்குச் சிந்தனை என்ற பெயரில் சாதிகளைப் பிற்போக்கின் அடையாளமாக பார்க்கும் போலி நாகரிக கலாச்சாரம் பெருகி வரும் சூழலில், சாதிகளைச் சமூக நீதியின் அடித்தளமாகவும், மாநில வளர்ச்சிக்கான அலகாகவும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான புரட்சியாகும். இதன்மூலம் நீங்கள் ஆந்திராவின் சமூக நீதிக் காவலராக உயர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ‘ஆந்திராவின் சமூக நீதிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஒட்டுமொத்தமாக ஈட்டி விட முடியாது. அதுதான் நுண் பொருளாதாரத்தின் அடிப்படையாகும். ‘‘வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான்’’ என்பது தமிழ்ப்புலவர் ஔவைப் பாட்டியின் வாக்கு ஆகும்.

அதற்குச் சிறந்த உதாரணமாகத்தான் தாங்கள் அறிவித்த ஒவ்வொரு சாதிக்குமான வாரியங்கள் அமைந்துள்ளன. 56 வாரியங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அந்த சமுதாய மக்களின் நலனுக்காக ரூ.75,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அந்த வகையில் இது சமூக நல நடவடிக்கை மட்டுமின்றி, பொருளாதார நல நடவடிக்கையுமாகும்.

சமூகம் சார்ந்த வாரியங்கள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் அந்தந்த சமூகங்களுக்கு வழங்கப்படும்; நியாயவிலைக் கடை பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், பள்ளிகளுக்குச் செலுத்தப்படும் கல்விக் கட்டணத்தைத் திருப்பி அளித்தல் ஆகியவை இந்த வாரியங்கள் மூலம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தச் சமுதாயங்கள் வறுமை இல்லாத சமுதாயங்களாகவும், கடன் இல்லாத சமுதாயங்களாகவும் மாறும்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 45 முதல் 60 வயது வரையிலான பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.18,750 கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் தற்சார்பு நிலையை அடையவும், குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட தனி நபர்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் வழிவகுக்காது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். இது மாநிலத்தின் வளர்ச்சியாக மாறும் என்பது உறுதி.

ஆந்திரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்து, இதுவரை 40 விழுக்காடு மதுக்கடைகளை மூடியிருப்பதும் பாராட்டத்தக்கதாகும். இதுவும் சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி வாரியங்களை அமைத்திருப்பது தொலைநோக்குப் பார்வை கொண்டதாகும். இதற்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திரத்தில் சமூக நீதியை வளர்த்தெடுக்கும் வகையில் இத்தகைய சமூக நீதிப்பார்வை தொலைநோக்குத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x