Published : 24 Oct 2020 12:24 PM
Last Updated : 24 Oct 2020 12:24 PM

வளம்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்ற மோடி ஆட்சியில் வறுமைதான் வளர்ந்திருக்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை

2024இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:

“சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனா பரவல் தொடங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்காததால் கடும் விளைவுகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் அச்சம், பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், மறுபக்கம் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் மக்கள் நாள்தோறும் போராடி வருகிறார்கள்.

தொடக்கத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறித்து பிரதமர் மோடி மார்ச் 25 ஆம் தேதி அன்று வாரணாசியில் பேசும்போது, பாரதப் போர் 14 நாள்களில் முடிந்தது. ஆனால், கரோனா ஒழிப்புப் போர் 21 நாள்களில் முடியும் என்று பகிரங்கமாகக் கூறினார். ஆனால், 7 மாதங்கள் உருண்டோடியதே தவிர, கரோனா ஒழிப்பு போர் கடும் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது.

இதற்குப் பிரதமர் மோடி அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம். இதன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி, வாழ்வாதாரத்திற்காக மக்கள் தவித்து வருகிறார்கள்.

2017 ஆம் ஆண்டில் உலக அளவில் வறுமையில் வாடிய 68.9 கோடி மக்களில் 13.9 கோடி பேர் இந்தியர்கள். இந்தியர்களில் 5 பேரில் ஒருவர் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று 2019 ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட வறுமை ஒழிப்பு அறிக்கை கூறுகிறது. வளம்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்று கூறிய மோடி ஆட்சியில் வறுமைதான் வளர்ந்திருக்கிறது.

இதையெல்லாம் மூடி மறைக்கிற வகையில், கரோனா உயிரிழப்புகளைக் குறைத்ததின் மூலம் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு, சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் 2020 ஆம் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான ஆசிய நாடுகளின் பங்களிப்பை 2 ட்வீட்களில் சுட்டிக்காட்டியிருந்தார். கவுசிக் பாசு சுட்டிக்காட்டியபடி, ஆசியாவிலேயே இந்தியாவில்தான் கரோனா உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்திருக்கின்றன.

அதேசமயம், ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியிலும் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சம் பேரில் 83 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், சீனாவில் 3 பேரும், வங்கதேசத்தில் 34 பேரும், வியட்நாமில் 0.4 பேரும். நேபாளத்தில் 25 பேரும், பாகிஸ்தானில் 30 பேரும் தாய்லாந்தில் 0.8 பேரும், இலங்கையில் 0.6 பேரும், மலேசியாவில் 6 பேரும், இந்தோனேசியாவில் 46 பேரும் உயிரிழந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவை விட, இந்தியாவில் கரோனா உயிரிழப்புகள் இரு மடங்கு அதிகமாக நடந்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியில் இந்தியா மைனஸ் 10 சதவீதமாகச் சுருங்கியிருக்கிறது. சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளில் ஜிடிபி வளர்ச்சி குறிப்பிடும்படி உள்ளது. சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் தரவுகளின்படி, ஜிடிபி விகிதம் 3.8 சதவீதத்தை எட்டி வங்கதேசம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு 10 சதவீதம் சுருங்கியதால், இந்தியாவைப் பின்தள்ளிவிட்டு வங்கதேசம் முன்னேறியுள்ளது.

சமூக மற்றும் அரசியல் காரணங்களும் பொருளாதாரப் பாதிப்புக்குக் காரணம். சமூக நல்லிணக்கம் குறைந்ததும், சமூகத்தில் அடையாளப்படுத்தி நடத்தப்படும் பிரிவினையும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன' என்றார்.

இதுகுறித்துப் பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, 'சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கெடுப்பு அதிகரித்துள்ளது. கரோனோ காலத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கெடுப்பும் இருந்ததால், பெரும்பாலான ஆசிய நாடுகள் எதிர்மறை பாதிப்பிலிருந்து விடுபட்டு, அந்த நாடுகளின் வளர்ச்சி 38 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி ஆடை தயாரிப்பில் பெண் தொழிலாளர்களை வங்கதேசம் அதிக அளவில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

என்எஸ்எஸ்ஓ எனப்படும் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் 2017-18 ஆண்டு சர்வேயின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட 17 சதவீத இந்தியப் பெண்கள் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் அரசியல் நடவடிக்கை அதிகம் உள்ள இந்தி பேசும் பெரும்பாலான மாநிலங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4 சதவீதத்திலிருந்து 7 சதவீதத்துக்குள் உள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும், சாதி, வகுப்புவாதம் மற்றும் பாலினப் பாகுபாடு எந்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது என்பதற்கான போதுமான ஆய்வுகள் இதுவரை இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலையில், கரோனா பரவல் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.

இந்தியப் பொருளாதாரத்தை 2025 ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளம்மிக்க நாடாக உயர்த்திக் காட்டுவேன் என்று உரத்த குரலில் பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய இந்தியாவில் எதிர்மறை வளர்ச்சியின் காரணமாக மோடியின் கனவு பகல் கனவாகவே அமையப் போகிறது.

இதுகுறித்து கருத்துகளை வெளியிட்ட தர நிர்ணய அமைப்புகள், 2025 ஆம் ஆண்டில் அந்த இலக்கை அடையமுடியாத நிலையில். 2027இல் அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால் 500 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை என்று கூறியிருக்கிறது.

கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருக்கிற மத்திய பாஜக அரசு அத்தகைய முதலீடுகளைச் செய்வதற்கு எத்தகைய நிதி ஆதாரங்களும் இல்லை. தற்போது 2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9 டிரில்லியன் டாலராகத்தான் இருக்கிறது. கடுமையான ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிகக் குறைவாக 24 சதவிகிதம் சுருங்கியிருக்கிறது.

அனைத்துத் துறைகளும் வளர்ச்சியில் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய மக்களை குறைந்தபட்சம் வறுமையின் பிடியிலிருந்து மீட்க முடியாத நிலையில் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போகிறார்கள். அதே போல, 2024இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடி ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற நிதிஷ் குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையில் ஈடுபாடுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகிற வகையில் பிஹார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x