Published : 24 Oct 2020 06:42 AM
Last Updated : 24 Oct 2020 06:42 AM
வானகரத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் மலர் சந்தையில் தேங்கிய மழைநீரால் நேற்று விற்பனை பாதிக்கப்பட்டது. மலர்களின் விலை வீழ்ச்சியால் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாயினர்.
சென்னை வானகரம் மலர் சந்தையில் நேற்று முன்தினம் பெய்தகனமழையால், சந்தை முன்புஏரி போல் மழைநீர் தேங்கியது.சந்தைக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் சந்தை வளாகமே சகதியாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக மலர்களை ஏற்றி வந்த வாகனங்கள் சந்தைக்குள் வரமுடியவில்லை. சில்லறை வியாபாரிகளும் சந்தைக்குள் வர முடியவில்லை. இதனால் விற்பனை குறைந்து வியாபாரிகள் அவதிக்கு உள்ளாயினர்.
இதுதொடர்பாக சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் மூக்கையா கூறியதாவது:
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மலர் சந்தை, சாலை உயரத்தில் இருந்து 10 அடி பள்ளத்தில் உள்ளது. லேசான மழை பெய்தாலும், சந்தைக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது.
சந்தைக்குள் மழைநீர் புகாமல் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கோயம்பேடு மலர் சந்தையை திறக்க வேண்டும் என்று சிஎம்டிஏ நிர்வாகத்திடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே சரி செய்யலாம் என்று பார்த்தால், பெரும்தொகை செலவாகும்போல் தெரிகிறது.
ஒவ்வொரு மலர் வியாபாரியும், ஆயுதபூஜை நாட்களில்தான் அதிக அளவில் மலர்களை விற்று வருவாய் ஈட்டுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு ஆயுதபூஜையில் வியாபாரமே இல்லை. இன்று அதிகாலை மலர்களை வாங்க வந்த சில்லறை வியாபாரிகள், மழைநீர் தேங்கியிருப்பதைப் பார்த்துவிட்டு, மலர்களை வாங்காமல் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டனர். வாகனங்கள் சேற்றில் புதைந்துவிடும் என்பதால் சரக்குகளையும் சந்தைக்குள் கொண்டுவர முடியவில்லை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முழுவதும் விற்பனை மந்தமாகவே நடைபெற்றது.
மதுரை போன்ற நகரங்களில் ஆயுதபூஜையை ஒட்டி மலர்கள் விற்பனை மற்றும் விலை உயர்ந்துள்ள நிலையில், இங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இங்கு சாமந்தி கிலோ ரூ.80, மல்லி, முல்லை தலா ரூ.550, கனகாம்பரம் ரூ.500, ஜாதிமல்லி ரூ.300-க்கு விற்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT