Published : 23 Oct 2020 07:37 PM
Last Updated : 23 Oct 2020 07:37 PM
மதுரை மாவட்டம் பேரையூர் முருகனேரியில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 5 பெண் தொழிலாளர் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
“மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முருகனேரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று (23.10.2020) ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பையா என்பவரின் மனைவி அய்யம்மாள், பாண்டி என்பவரின் மனைவி சுருளியம்மாள், முருகேசன் என்பவரின் மனைவி வேலுத்தாய், பாண்டி என்பவரின் மனைவி லெட்சுமி மற்றும் சுந்தர்ராஜ் என்பவரின் மனைவி காளீஸ்வரி ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் வருவாய்த் துறை அமைச்சருக்கும், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
பண்டிகை காலம் விரைவில் வரவிருப்பதால், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT