Published : 23 Oct 2020 05:54 PM
Last Updated : 23 Oct 2020 05:54 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

“நேற்று மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையை கடக்கும்.

வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 17 செ.மீ, ராம கிருஷ்ண ராஜு பேட்டை (திருவள்ளூர்) 13 செ.மீ, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 11 செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்), திருத்தணி P.T.O (திருவள்ளூர்) தலா 9 செ.மீ, மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருவள்ளூர் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வேம்பாக்கம் (திருவண்ணாமலை), புதுச்சேரி (புதுச்சேரி) தலா 7செ.மீ.

திருவாலங்காடு (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) தலா 6 செ.மீ, கொரட்டூர் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பெரம்பூர் (சென்னை) தலா 5 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

நேற்று மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையை கடக்கும்.

அக்டோபர் 23 இன்று வடக்கு வங்க கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x