Published : 23 Oct 2020 04:46 PM
Last Updated : 23 Oct 2020 04:46 PM
கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாக மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்க விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் "வீர தீர சூரன்" என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் நடிகர் சூரி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.
அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது அவர் நிலம் வாங்கும் எண்ணத்தில் இருப்பதால் அவருக்கு நிலம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்து நிலத்துக்கான அட்வான்ஸாக சம்பள பணத்தை கழித்துள்ளனர்.
பின்னர் நிலத்தைக்காட்டி மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.சி. குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.
அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்று நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.
நிலம் வாங்கும்போதே பல பிரச்சினைகள் இருப்பது நடிகர் சூரிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பி தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் ரமேஷ் குடவாலா பதிவு செய்ததாக தெரிகிறது.
ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி தொகையான 2 கோடியே 70 லட்ச ரூபாயை சூரிக்கு தராமல் அலைக்கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அடையாறு போலீஸில் புகார் அளித்த நடிகர் சூரி புகார் மீது நடவடிக்கை வராததால் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதுவும் நடவடிக்கை வராததால் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நடிகர் சூரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நடிகர் சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment