Published : 23 Oct 2020 04:04 PM
Last Updated : 23 Oct 2020 04:04 PM
கோவை க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடியில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். இது தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை பாலக்காடு சாலை, க.க.சாவடி அருகே, கோவைப்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸார், இன்று (அக். 23) அதிகாலை 5 மணிக்கு இந்த வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்துக்கு வந்தனர். அலுவலகத்தின் கதவுகளை பூட்டினர். அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகளை துண்டித்தனர். அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா உட்பட அனைவரது செல்போன்களையும் வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
பின்னர், அலுவலகத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, ஊழியர்கள் அறை உள்ளிட்ட ஒவ்வொரு அறைகளிலும் கணக்கில் வராத பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீஸார் சோதனை செய்தனர். போலீஸாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சிலர் தங்களிடம் இருந்த கணக்கில் வராத தொகையை ஜன்னல் வழியே வெளியே வீசினர். அதைக் கண்ட போலீஸார் அந்த தொகையை தேடிக் கண்டுபிடித்தனர்.
மேலும், அலுவலகத்தில் கோப்புகள் வைக்கும் அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, ஊழியர்களிடம் என பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் ரூ.91 ஆயிரம் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகைக்கு உண்டான காரணத்தை அங்கிருந்த ஊழியர்களால் கணக்கு காட்ட முடியவில்லை. விசாரணையில், அவ்வழியாக வந்து செல்லும் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களிடம் பெற்ற லஞ்சத் தொகை அது என்பது தெரியவந்தது.
இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை, மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவியாளர், அலுவலக உதவியாளர் என 3 அரசு ஊழியர்களும், மோட்டார் வாகன ஆய்வாளரால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவரும் என மொத்தம் 4 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கூறும்போது, "இந்த சோதனையின் இறுதியில், கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத தொகை தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT