Published : 23 Oct 2020 03:11 PM
Last Updated : 23 Oct 2020 03:11 PM
பொன்மலை ஜி கார்னரில் உள்ள காய்கனி மொத்த மார்க்கெட் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து காய்கனி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்தில் திறந்தவெளியில் நடைபெற்று வருகிறது.
மழை பெய்யும்போது அங்கு தேங்கும் மழைநீரில் காய்கறிகள் வீணாவதாகவும், இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறி வியாபாரிகளில் ஒரு தரப்பினர், காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், விசாரணை அக். 28-ம் தேதி மீண்டும் வரவுள்ளது.
இந்தநிலையில், காந்தி மார்க்கெட்டை திறப்பதில் உள்ள நீதிமன்ற தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதை மாவட்ட நிர்வாகத்துக்கு உணர்த்தும் வகையில் அக். 25-ம் தேதி இரவு முதல் அக். 28-ம் தேதி வரை ஜி கார்னர் உட்பட திருச்சியில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டுகள் இயங்காது என்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொருளாளருமான வீ.கோவிந்தராஜூலு நேற்று அறிவித்தார்.
ஆனால், அவரது அறிவிப்பை ஏற்க மறுத்து, ஜி கார்னரில் வழக்கம்போல் காய்கனி விற்பனை நடைபெறும் என்று வியாபாரிகளில் ஒரு தரப்பினர், அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட காய்கனி வியாபாரிகள் ஒற்றுமை சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.பாபு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக். 23) மனு அளித்தார்.
இது தொடர்பாக பாபு கூறுகையில்,
"காந்தி மார்க்கெட் வேறு, கள்ளிக்குடி மார்க்கெட் வேறு என்று வியாபாரிகளிடம் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியிருந்தார். தற்போதும் அதையேதான் கூறினார். மேலும், காந்தி மார்க்கெட் கண்டிப்பாக திறக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்தி மார்க்கெட் இடிக்கப்பட்டாலும், மீண்டும் இதே இடத்தில் மார்க்கெட் கட்டித் தரப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார். எனவே, போராட்டம் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளோம். எங்கள் தரப்பில் இருந்து 500 முதல் 600 வியாபாரிகள் வரை ஜி கார்னரில் வழக்கம்போல் காய்கனி வணிகத்தில் ஈடுபடுவர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT