Published : 23 Oct 2020 02:47 PM
Last Updated : 23 Oct 2020 02:47 PM

எஸ்பிஐ முதல்நிலைத் தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரைவிடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள்: தொடரும் மத்திய பாஜக அரசின் சமூக அநீதி: ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

எஸ்பிஐ வங்கிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரைவிடக் குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 23) வெளியிட்ட அறிக்கை:

"எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை விடக் குறைந்த 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் கட் ஆப் மதிப்பெண்ணாக 62 பெற்றுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் மட்டும் 57.75 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதன்மை தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

பாரத ஸ்டேட் வங்கியில் காசாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வேலைவாய்ப்பு, முன்னேறிய வகுப்பினருக்கான இந்தப் பத்து சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டால் பறிக்கப்பட்டுள்ளது.

இப்போது, மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட்டில் 'சீனியர் செக்யூரிட்டி ஆபீஸர்' மற்றும் 'சீனியர் மெடிக்கல் ஆபீஸர்' உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS) கட்டணம் ஏதுமில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் (ஓபிசி) மட்டும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது இன்னொரு அநீதி!

கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்துவரும் சமூகநீதியைப் பறிக்கவே, முன்னேறிய வகுப்பினருக்கு பத்து சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக, திட்டமிட்டுக் கொண்டு வந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற எஸ்பிஐ தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளிலும் இந்தச் சமூக அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வேலைவாய்ப்பைப் பறித்து, இன்னொரு பக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் விரைந்து நடத்தாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு, முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தினமும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை மக்களின் உறுதியும் இறுதியுமான கருத்தாகும்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் சேருவதற்கு எல்லா வகையிலும் தடைகளை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சங்களைத் தகர்த்தெறியும் கேடுகெட்ட செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாழ்படுத்தும் அத்தனை முயற்சிகளுக்கும் அமைதியாகத் துணை நின்று, இதைத் தட்டிக்கேட்கத் தயங்கி நிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக இளைஞர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வருகிறார்.

தமிழக ஆளுநர் தரப்பிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வந்த செய்திகளை இதுவரை முதல்வர் மறுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? சமூகநீதிக்குப் போகிறபோக்கில் இன்னொரு துரோகத்தைச் செய்வதற்கு மத்திய பாஜக அரசுடன் பழனிசாமி திரைமறைவில் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறாரா?

இந்த அநீதிகளை, அக்கிரமங்களைப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் நீண்ட காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும் என்றும், சமூகநீதி வரலாற்றில் இது போன்ற வரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அதிமுகவும், அதன் ஆட்சியும் அடியோடு தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்க விரும்புகிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x