Last Updated : 12 Oct, 2015 10:16 AM

 

Published : 12 Oct 2015 10:16 AM
Last Updated : 12 Oct 2015 10:16 AM

சேலம் மாவட்டத்தில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எலி சின்னம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு: வாணர் குல அரசர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பு

தமிழகத்தில் முதன்முறையாக எலியின் உருவம் பொறிக்கப்பட்ட 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு சேலம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தலைவாசல் பெரியேரி கிராமத்தில் மண்ணில் புதைக் கப்பட்டு இருந்த கல்வெட்டு ஒன்றை அதே பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பொன்.வெங்கடேசன் கண்டறிந்துள்ளார்.

இந்த கல்வெட்டைப் படிஎடுத்து ஆராய்ந்த தமிழக தொல்லியல் கழக முன்னாள் இணை இயக்குநர் அற.பூங்குன்றன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கல்வெட்டில் இரு தானங் களைக் குறிக்கும் செய்தி இடம் பெற்றுள்ளன. கல்வெட்டின் நான்கு புறங்களிலும் எழுத்து களும், உருவங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. கல்வெட்டின் முன் புறம் பூமாதேவியின் உருவமும், அதற்கு முன்பாக முக்காலியின் மீது இரு செல்வ குடங்களும், ஏனைய மூன்று பக்கங்களிலும் எலிச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எலி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. கல்வெட்டின் பின்புறம் மூஷிக (பெருச்சாளி) வாகனம் செதுக்கப்பட்டுள்ளது. ‘மூஷிக வாகனத்தை தன் குலச்சின்னமாக வாணகோவரையர் (வாணர்) கொண்டிருந்தனர்.

மாவலி மகாராஜாவின் வம்சத் தில் வந்தவர்களாக அறியப்படும் வாணகோவரையர்கள் 11-ம் நூற் றாண்டு முதல் 14-ம் நூற்றாண்டு வரை சேலம் மாவட்டம், ஆறக ளூரை தலைநகராக கொண்ட, ‘மகதை’ நாட்டை ஆண்டுவந்தனர் என்பது வரலாறு சொல்லும் செய்தி.

இவர்களின் முன்னோர் மாவலி மன்னரைப் பற்றி ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. முன் ஜென்மத்தில் ஒரு சிவாலயத்தில் ஒரு விளக்கு அணையாமல் இருக்க திரியை ஒரு எலி தூண்டி விட்டுக்கொண்டிருந்தது.

அதன் பலனாக மறு ஜென்மத்தில் அந்த எலி மாவலி மன்னராக அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

மாவலியின் வம்சத்தில் வந்த வாணகோவரையர்கள் தங்கள் குலச் சின்னமாக எலியை ஏற்றுக் கொண்டனர். அந்தச் சின்னமே இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.

வாணகோவரையர்கள் இந்தப் பகுதியில் இருந்த வன்னெஞ்சம் செய்வார் பிள்ளையார் கோயிலுக்கு செய்த நிலதானத் தைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாணகோவரையர்கள் பாண்டி யர்களின் கீழ் குறுநில மன்னர் களாக இருந்துள்ளனர். இந்தக் கல்வெட்டில் உள்ள வாசகம் ‘ஸ்வஸ்திஸ்ரீ அருளிச் செயல்’ என்று தொடங்குகிறது. கல்வெட்டு நிவா ஆற்றின் வடகரையில் அமைந் துள்ளது. இந்த நிவா ஆறு வசிஷ்ட நதி என அப்பகுதி மக்களால் தற்போது அழைக்கப்படுகிறது.

உயிர்நம்பி அழகியானவள் என்பவர் தன் கணவன் நினைவாக வன்னெஞ்சம் செய்வார் பிள்ளை யார் கோயிலுக்கு அமுதுபடைக் கவும், தண்ணீர் பந்தல் அமைக்க வும் தேவதான இறையிலியாக பெரியேரி என்னும் ஊரில் காட்டை திருத்தி இரண்டு மா நன்செய் நிலமும் (2,000 குழி) இதனால், வரும் அனைத்து வரி ஆதாயங்களும் ஆவணி மாதம் 11-ம் நாள் முதல் இறையிலியாகக் கொடுத்தது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரியேரி என்னும் இவ்வூர் குலசேகரன் பெரிய ஏரி என்று அக்காலத்தில் அழைக்கப் பட்டுள்ளது. குலசேகரபாண்டியன் காலத்தில் அவனது பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த முத்தூற் கூற்றத்து கப்பலூரை (உலகளந்த சோழநல்லூர்) சார்ந்த ஆதித்த கணபதி ஆள்வான் காடு வெட்டி என்பவர் இக்கல்வெட்டை பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x