Published : 23 Oct 2020 10:55 AM
Last Updated : 23 Oct 2020 10:55 AM
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவிழாக்கள், பண்டிகைகள் தொடர்ந்து வர உள்ளன. பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடினால், மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கும். கேரளாவில் இருந்தும் துணி, நகை, பொருட்கள் வாங்க மக்கள் கோவைக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
எனவே, ஒரே இடத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க, ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்களின் நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புத் தள்ளுபடி, இலவசம், குறைந்த விலையில் உணவு என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தேவையில்லாமல் கூட்டம் கூட்டுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை பொதுமக்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு, கரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஜவுளிக்கடையில் ஆய்வு
ஒப்பணக்கார வீதியில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் கரோனா தடுப்பு விதிகள் முறையாகபின்பற்றப்படுகிறதா என மாநக ராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் கூறும்போது, ‘‘பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பொருட்களை வாங்க வேண்டும். விதிகளை மீறும் வர்த்தக நிறுவனங்களின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT