Published : 23 Oct 2020 06:30 AM
Last Updated : 23 Oct 2020 06:30 AM
பழையசீவரம் பகுதியில் அமைக்கப்படும் தடுப்பணையை இடம் மாற்றுவது சாத்தியமில்லை என்று பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளிடம் பொதுப்பணித் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தின. இதை ஏற்கமறுத்ததால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
ஆனால், பொதுப்பணித் துறையின் திட்டம் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கும் குழுவினர் உள்ளாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்துபழையசீவரம் பகுதியை தேர்வு செய்தது. அங்கு தடுப்பணை அமைக்க ரூ.42 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழா நடந்த உள்ளாவூரில் தடுப்பணையை அமைக்காமல், பழையசீவரம் பகுதியில் பணிகள் தொடங்கியதால் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே திட்டமிட்ட உள்ளாவூர் பகுதியிலேயே தடுப்பணை அமைக்க வேண்டும்; இடமாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, "உள்ளாவூரில் தடுப்பணைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்தக் கிராமத்தில் இருந்து இருபுறமும் சில கி.மீ. தொலைவுக்கு ஆய்வுகள் நடைபெற்றன. அதில் உள்ளாவூரில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள பழையசீவரம் பகுதி தடுப்பணை அமைக்க உகந்த இடமாக இருந்ததால் அந்த இடத்தை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் குழுவினர் தேர்வு செய்தனர். இதன் அடிப்படையில் அந்த இடத்துக்குத்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் பங்கேற்க வசதியாக இருக்கும் என்பதால்தான் உள்ளாவூரில் விழா நடைபெற்றது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட இடத்தை மாற்றி தடுப்பணை அமைக்கவில்லை’’ என்று விளக்கம் அளித்தனர். ஆனாலும் விவசாயிகள் ஏற்காததால் பிரச்சினை நீடித்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாலாறு பாதுகாப்பு கூட்டியகத்தைச் சேர்ந்த காஞ்சி அமுதன் தலைமையில் விவசாயிகள் பங்கேற்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இரு இடங்களிலும் உள்ளசாதக, பாதகங்களையும், உள்ளாவூரில் அதிக பள்ளம் இருப்பதால் தடுப்பணை அமைக்க சாத்தியமில்லை என்பதையும் அதிகாரிகள் விளக்கினர். ஆனால், விவசாயிகள் ஏற்கவில்லை. 2 நாளில் விவசாயிகளிடம் கலந்து பேசிமுடிவு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment